அம்புலனஸ் இல்லாமையால் தனது சொந்தக்காரில் அழைத்துச் சென்ற வைத்தியர் – திருக்கோவில் பிரதேசத்தில் ஒரு சூலில் பிறந்த 3 குழந்தைகள்

(வி.சுகிர்தகுமார்)
கடவுளாக தோன்றிய வைத்திய குழுவினர் என நெகிழ்ச்சி அடைந்தனர் ஒரு சூலில் மூன்று குழந்தைகளை பல வருடங்களின் பின்னர் திருக்கோவில் பிரதேசத்தில் முதலாவதாக பெற்றெடுத்த தாயும் குழந்தைகளின் தந்தையும்.


திருக்கோவில் பிரதேசத்தில் இவ்வாறு மூன்று குழந்தைகள் முதலாவதாக தமக்கு கிடைத்தமையிட்டு தனது கிராமமும் குடும்பமும் தானும் மகிழ்ச்சியடைவதுடன் இச்சந்தர்ப்பத்தில் கடவுளுக்கும் கடவுளாய் தோன்றிய வைத்திய குழவினருக்கும் நன்றியை தெரிவித்தனர் திருக்கோவிலை சேர்ந்தவரும் கோமாரி பிரதேசத்தில் வாழ்கின்றவர்களுமான லோவிநாத் சுஜாதா ஆகிய இளம் பெற்றோர்கள்.

குறித்த தாயானவர் கடந்த (21) ஆம் திகதி கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திர சிகிச்சை மூலம் மூன்று ஆண் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றுக்கொண்டார்.

சிகிச்சை மூலம் பிறந்த மூன்று சிசுக்களும் 2240, 2190, 1800 கிராம் நிறையுடையதாக இருந்ததுடன் தாயும் சேய்களும் ஆரோக்கியமுடையவர்களாக உள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் இருந்து மூன்று குழந்தைகளையும் தாயையும் பெருமகிழ்ச்சியோடு தமது சொந்த வீட்டிற்கு அழைத்து வந்த உறவினர்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.

அத்தோடு குடும்ப உறுப்பினர்கள் இணைந்து தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த தாய் தந்தை குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கி சென்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழந்தைகளின் தந்தை லோவிநாத் ....

முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன். அடுத்தபடியாக வைத்திய குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என ஆரம்பித்தார்.

கோமாரியில் வாழ்ந்து வந்த எமக்கு மூன்று குழந்தைகள் கிடைக்கும் என வைத்தி பரிசோதனை மூலம் தெரியவந்ததது. இதன் பிரகாரம் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆனாலும் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் பொத்துவிலை சேர்ந்த டொக்டர் லாபிர் மற்றும் கோமாரி வைத்தியசாலையின் வைத்தியர் றிபாஸ், உபுல், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் யுரோகா விக்ரமசிங்க மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபணர் ரஜித் விதானகே ஆகியோருக்கும் நன்றி கூறினார்.

சம்பவம் தொடர்பில் அவர் விபரிக்கையில் வைத்தியர்கள் எங்களுக்கு வழங்கிய திகதி 23. ஆனாலும் கடந்த 21ஆம் திகதி அதிகாலை 4மணியளவில் என் மனைவிக்கு நோவு ஏற்பட்டது. உடனே கோமாரி வைத்தியசாலையின் வைத்தியர் றிபாஸ் அவர்களுக்கு அழைப்பை மேற்கொண்டேன். அங்கு அம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் வைத்தியசாலைக்கு சென்ற எங்களை அவரது காரில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்றார். செல்லும்போதே அங்கு அம்புலன்ஸ் ஏற்பாட்டை மேற்கொண்டார். திருக்கோவில் வைத்தியசாலையிலும் எனது மனைவியை நன்றாக பார்த்த வைத்திய குழாம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றினர். அங்கிருந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் ஜிரேகா விக்கிரமசிங்க விடுமுறையில் சென்றதன் காரணமாக 12 மணிக்கு வருவதாக தெரிவித்தார். நிலமையினை புரிந்து கொண்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய குழாமினர் உடனடியாக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு அங்கிருந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் ரஜித் விதானகே அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் ரஜித் விதானகே தலைமையிலான வைத்திய குழாமினர் சத்திர சிகிச்சையினை உடனடியாக மேற்கொண்டு 11.07 அளவில் எனது மனைவியையும் குழந்தைகளையும் ஆரோக்கியமுடையவர்களாக என்னிடம் ஒப்படைத்தனர் என தழுதழுத்த குரலில் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

இதேநேரம் தனது குழந்தைகளை எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள கல்விமான்களாக மாற்றுவதே தனது இலக்கு எனவும் இதற்காக பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கக் கூடும் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே இவ்வாறான பெற்றோர்களுக்கு அரசினால் வழங்கப்படும் உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.