மாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகளை நடாத்த அரச அதிபர் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்களின் நலன் கருதிஅரச தொலைக்காட்சி கல்விச் சேவைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி ஒளிபரப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த சர்வதேச மற்றும் உள்நாட்டு சார்பற்ற அரச தொண்டாற்று நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக்கொடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதன்படி மாவட்ட அரசாங்க அதிபரின் முயற்சியில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஒருங்கிணைப்புடன் அரச தொலைக்காட்சிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவசக் கல்விப் போதனைகளை தடங்கலின்றி தொடர்ச்சியாக அமுல்படுத்துவதற்கு வசதியாக குறித்த தொண்டார்வு நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இன்று (22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இவ் விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்கஅதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புன்னியமூர்த்தி மற்றும் இம்மாவட்டத்தில் செயற்படும் பல்வேறு அரச, அரச சார்பற்ற தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் கொரோனா பரவும் சூழ்நிலையால் இம்மாவட்டத்தில் தடைப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகள் மாற்றுவழிகள் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரக் குமார் தலைமையிலான கல்விஅதிகாரிகள் குழுவொன்று முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இக்குழுவினரும் தாமும் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்த அரச தொலைக்காட்சி பாடபோதனைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.

பயனுள்ள இப்பணியினை மேலும் முன்னெடுத்துச் செல்ல மேலதிக நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புகள் தேவைப்படுவதனால் இம்மாவட்டத்தில் செயல்படும் தொண்டார்வ நிறுவனங்கள் இந்த மகத்தான கல்விப் பணிக்கு ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தொண்டார்வ நிறுவனங்களின் சில பிரதிநிதிகள் இதற்கான பங்களிப்பை செய்வதற்கு தாம் முன்வருவதாகவும், ஏனையோர் தமது நிதிஅன்பளிப்பாளர்களின் உதவிகளைப் பெற்று உரிய திட்டத்திற்கு பங்களிப்பு நல்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

கோவிட் 19 கொரோனா பாதிப்பினால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி அரச ஊடகங்களான இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனமும், வசந்தம் தொலைக்காட்சியும் இலவச கல்விப் போதனைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.