“அம்பன்” சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் !

(எரிக்)
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நேற்றைய தினம் (16.05.2020) காணப்பட்ட வலுவான தாழமுக்கமானது (Deep Depression) இன்று (17.05.2020) அதிகாலை கிட்டத்தட்ட 02.30 மணிக்கு சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

இதற்கு தாய்லாந்து நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட AMPHAN எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது அடுத்த வரும் 12 மணித்தியாலத்தில் வலுவான சூறாவளியாக   (Severe Cyclonic Storm) வளர்ச்சி அடைந்து, நாளை (18.05.2020) மிகவும் வலுவான சூறாவளியாக (Very Severe Cyclonic Storm) மேலும் வளர்ச்சி அடையும்.

இந்த சூறாவளியானது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 06km/h வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது
தற்போது இலங்கையின் திருகோணமலை நகரத்தில் இருந்து வடகிழக்காக 610 km தூரத்திலும்,
இந்தியாவின் ஒரிஷா (ODISHA) மாநிலத்தின் PRADIP நகரிலிருந்து தெற்காக 1000km தூரத்திலும்,
மேற்கு வங்கத்தின் (WEST  BENGAL) DIGHA நகரிலிருந்து தெற்கு தென் மேற்காக 1160 km தூரத்திலும்,
பங்களாதேஷ் நாட்டின் KHEPUPARA  நகரில் இருந்து தெற்கு தென்மேற்காக 1260 km தூரத்திலும் தற்போது மையம் கொண்டுள்ளது.

இது இன்று வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் இதன் நகரும் திசையை வடக்கு வடகிழக்காக மாற்றி எதிர்வரும் 18ம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கு வங்கத்திற்கும் வட ஒரிஷாவிற்கும் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் தற்போது இலங்கையில் நிலவிக் கொண்டிருக்கும் மழை கொண்ட காலநிலை இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் மணிக்கு 50 km தொடக்கம் 60km வரையான வேகத்தில் இடையிடையே பலமான காற்று வீசுவதுடன் பல பிரதேசங்கள் மேகமூட்டமாக காணப்படும்.

இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றும் பலமானதாக வீசும் எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பிராந்தியங்களில் பொறுத்தவரையில் இந்த AMPHAN சூறாவளியின் தாக்கத்தினால் ஆழ்கடல் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் எமது வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வழங்கப்படும் வானிலை தொடர்பான எதிர்வுகூறல்களை அவதானத்துடன் செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திரிகோணமலை, முல்லைத்தீவு ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் அதிக மழை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40km முதல் 45km வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது புத்தளம் முதல் காலி, அம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கடற் பிராந்தியத்தில் அதிகரித்து வீசக்கூடும்.

இலங்கை தீவை சுற்றி உள்ள கடல் பிராந்தியங்கள் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதுடன், புத்தளம் முதல் காலி அம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த காற்றின் வேகமானது மணிக்கு 70km முதல் 80km வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தில் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.