மட்டக்களப்பில் 16 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகள் ஒரே பார்வையில்


பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2020 கடந்த ஆகஸ்ட் 5ஆந் திகதி நடைபெற்று முடிந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டன.

இக்கட்சிகளினூடாகவும், சுயேச்சைக் குழுக்களினூடாகவும் 304 அபேட்சகர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இலக்காகக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். இருப்பினும் இத்தேர்தலில் 3 இலட்சத்தி 14 ஆயிரத்தி 850 பேர் வாக்களித்திருந்தனர். 

இதில் கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 89 ஆயிரத்தி 164 வாக்குகளும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து ஒரு இலட்சத்தி 44 ஆயிரத்தி 751 வாக்குகளும், பட்டிருப்புத் தொகுதியில் 68 ஆயிரத்தி 310 வாக்குகளும் தபால்மூல வாக்குகள் 12 ஆயிரத்தி 625 உம் உள்ளடங்கியுள்ளன.

இவற்றில் கல்குடா தொகுதியில் அளிக்கப்பட்ட 5 ஆயிரத்தி 145 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியிலிருந்து 6 ஆயிரத்தி 725 வாக்குகளும், பட்டிருப்புத் தொகுதியிலிருந்து 4 ஆயிரத்தி 764 வாக்குகளும், தபால் வாக்குகளில் 204 வாக்குகளுமாக மொத்தம் 16 ஆயிரத்தி 838 வாக்குகளக் நிராகரிக்கப்பட்டவையாகவும் இனங்காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 5வீத வெட்டுப்புள்ளிக்கு மேல் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பிரதான ஆறு கட்சிகள் ஆசனப் போட்டிக்குள் உள்வாங்கப்பட்டன. இவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி 26.66 சதவீதமான 79 ஆயிரத்தி 460 வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனம் உள்ளடங்களாக 2 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 22.71 சதவீதமான 67 ஆயிரத்தி 692 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11.55 சதவீதமான 34ஆயிரத்தி 428 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 11.22 சதவீதமான 33 ஆயிரத்தி 424 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டன. 

மேலும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 10.42 சதவீதமான 31 ஆயிரத்தி 54 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 9.52 சதவீதமான 28 ஆயிரத்தி 362 வாக்குகளையும் பெற்ற நிலையில் ஆசனங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை.

இதுதவிர ஆசன ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொண்ட கட்சிகளின் விருப்புவாக்குகள் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக ராசமாணிக்கம் சானக்கியா ராகுல் ராஜபுத்திரன் 33 ஆயிரத்தி 332 விருப்புவாக்குகளையும், கோவிந்தன் கருணாகரம் 26 ஆயிரத்தி 382 விருப்பு வாக்குகளையும் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் 54 ஆயிரத்தி 198 விருப்பு வாக்குகளைப் பெற்று சிவனேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 17 ஆயிரத்தி 599 விருப்பு வாக்குகளை பெற்று அகமட் செயினுலாப்தீன் நசீர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 22 ஆயிரத்தி 218 விருப்பு வாக்குகளை பெற்று சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பாராளு மன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இம்மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தொகுதி வாரியாக பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் தபால் மூலம் பெற்றுக் கொண்ட வாக்குகள் விபரத்தினை கீழேயுள்ள அட்டவனையில் காணலாம்.