மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் அறிமுகமாகி பேசிவந்துள்ள நிலையில் அவர், குறித்த பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பெண்ணையும் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் கொழும்பில் தங்கியிருந்த விடுதியில் வைத்து குறித்த ஆண், சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதுடன் இதனால் சிறுமியின் வாய் மற்றும் கை ,கால், முதுகு உட்பட உடல் முழுக்க காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியுடன் தாயார், கொழும்பில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் கொழும்பில் வைத்து தனக்கு நடந்ததை சிறுமி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.