உலகம் முழுவதும் 1.8 கோடி பேருக்கு கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் (கொவிட் 19) இதுவரை 1 கோடியே 80 இலட்சத்து 11 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் குறிப்பிடுகையில், "சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸுக்கு தற்போது உலகம் முழுவதும் 1.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 688,683 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 1 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் 4,764,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 157,898 பேர் பலியாகினர். இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றால் 2,708,876 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,616 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.