அம்பாறையில் ஹஜ் பெருநாள் தொழுகை


(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் கல்முனை நற்பிட்டிமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இன்று நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதானத்தில் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக சமூக இடைவெளிகள் பேணப்பட்டு இடம்பெற்றது.


பெருநாள் தொழுகையை மௌலவி டபிள்யூ.எம்.ஹூமைஸ் ஹாமி நடாத்தினார். இதேவேளை குத்பா பிரசங்கத்தை அஷ்ஷெய்க் ஏ.எச்.எச்.எம்.நௌபர் ஹாமி நிகழ்த்தினார்.

இப்பெருநாள் தொழுகையிலும், குத்பா பிரசங்கத்திலும் பெருமளவிலான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதியில் இஸ்லாமிய பிரசார மையம் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் தொழுகை மருதமுனை அக்பர் ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சர்வதேச அழைப்பாளரும் இஸ்லாமிய பிரசார மையத்தின் தலைவருமான எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகையினையும் பிரசங்கத்தையும் நடத்தி வைத்தார். சமூக இடைவெளி பேணிய விதத்தில் தொழுகை இடம்பெற்றது.