சிறப்பாக நடந்தேறிவரும் உகந்தமலையானின் ஆடிவேல் திருவிழா!

(காரைதீவு சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா திருவிழா ஆலயவண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறிவருகிறது.


ஆலயதிருவிழா சிறப்புப் பூஜைகளை ஆலய பிரதமகுருக்கள் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் உதவியாக சிவஸ்ரீ க.கு.சீ.கோவர்த்தன சர்மா ஆகியோர் நடாத்திவருகின்றனர்.


கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆடிவேல்விழா மஹோற்சவம் நாளை மறுநாள்(4) செவ்வாய்க்கிழமை ஆலய தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

ஆலய எல்லையினுள் பிரவேசிக்கும் சகலரும் முதலில் கடற்படையினரின் உடல் வெப்பச் சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.

தொடர்ந்து ஆலய நுழைவாயிலில் முக்கவசம் அணிவதை கண்காணிக்க இரு பொலிசார் வாயிலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். ஆதலால் சகலரும் முகக்கவசத்துடன் மட்டுமே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

நாட்டின் பல பாகங்களிலுமிருந்து இந்து பௌத்த பக்தர்கள் ஆலயத்திற்கு வருகின்றனர். இரவில் சொற்ப தொகையினரே ஆலய வளாகத்திலுள்ள மடங்களிலும் மரங்களின் கீழும் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அன்னதானத்திற்கு அனுமதி இல்லையாயினும் வருபவர்கள் சமைத்துண்ண வாய்ப்பளிக்கபடுகின்றனர்.

கிழக்கின் தென்கோடியில் பாணமைக்கு அப்பால் காட்டிற்குள் 15 மைல் தூரம் பயணித்தால் கடல் மலை சார்ந்த மனோரம்மியமான சூழலில் இவ்வாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.