26 நாட்களுக்குப் பின்னர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு ஊரடங்கு தளர்த்தப்பட்டது !

(ரூத் ருத்ரா)
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று(20) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் ஆலோசனைக்கமைவாக நேற்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 6 வது கூட்டத்தின் போது மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் இந்த ஊரடங்கு தளர்வினை அறிவித்தனை தொடர்ந்து மீண்டும் இப் பிரதேச மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். அதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது.

மேலும் மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட 82 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளதுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களாக எழுந்தமான முறையில் மேற்கொள்ளபட்ட பீ. சீ.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் எவருக்கும் தொற்றில்லை என்ற முடிவுகளுக்கமையவே இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து இப் பிரதேசத்தில் கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கடைபிடிப்பதற்கான விழிப்பூட்டல்களை வாழைச்சேனை பொலீசார் வழங்கி வருகின்றனர். இதேவேளை இன்று முதற்கட்டமாக மருந்தகம், பலசரக்கு கடை, மரக்கறிக் கடை, பழக் கடை போன்றன திறக்கப்பட்டன. நாளை சனிக்கிழமை இறைச்சிக் கடைகள், புடவைக் கடை, உணவகம் ஞாயிற்றுக் கிழமை ஹாட்வெயார், சிகை அலங்கார நிலையம் மற்றும் ஏனைய கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியாபார உரிமையாளர்கள் தங்களது வியாபார நிலையங்களை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடாத்தி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் பின்பற்ற தவறும் பட்சத்தில் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறும் சந்தர்ப்பத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதுடன் அரசாங்கத்தின் எதுவித உதவிகளும் வழங்கப்பட மாட்டாது என பிரதேச செயலாளர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டபோதிலும் மக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மீன் சந்தைகள் திறக்கப்பட வில்லை. பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.