கொரோனா பாதுகாப்பு, வெள்ள அனர்த்தம் தவிர்ப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு

(ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ. நாஸர்)
மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு, வெள்ள அனர்த்தம் தவிர்ப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித், பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ர்றுமு. ஜயந்த, பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்ஜே.எப். றிப்கா மற்றும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பொதுச்சந்தைகள் பள்ளிவாயல்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக மீளத்திறப்பதாக இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை தற்போது ஆரம்பமாகியுள்ள பருவப்பெயர்ச்சி மழையினால் எதிர்பார்க்கப்படும் வெள்ள அனர்த்தத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பல்வேறு திட்டங்கள் இம்மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அனர்த்த சூழ்நிலையின்போது அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து செயற்படவேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது.

நீரேந்துப்பகுதிகளில் மனித மற்றும் மிருகங்களுக்கு ஏற்படும் உயிராபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் பணிகள் மற்றும் முன் எச்சரிக்கை செயற்பாடுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மேலும் மழைக்காலத்தையடுத்து ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன் ஆயத்தங்கள் தொடர்பாக இங்கு தீர்மானிக்கப்பட்டது.