வைரஸ் தொடர்பில் சஜித் எழுப்பிய கேள்வியால் நாடாளுமன்றில் குழப்பம்

கொரோனா வைரஸ் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வி காரணமாக நாடாளுமன்றத்தில் இன்று குழப்பநிலை ஏற்பட்டது.

நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் சஜித் பிரேமதாச கொரோனா வைரஸ் தொடர்பான கேள்வியொன்றை எழுப்பியவேளை ஆளும்தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று எழுப்பப்பட்ட அதே கேள்வியை மீண்டும் எழுப்புவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார். எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எதிர்கட்சியினர் கொரோனா வைரஸ் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கேள்விகளை கேட்பதற்காக எதிர்கட்சியினரின் உரிமை பறிக்கப்படுகின்றதா என சஜித்பிரேமதாச கேள்வி எழுப்பினார். பி.சி.ஆர் இயந்திரங்கள், செயற்கை சுவாசக்கருவிகள், மருந்துகள் மற்றும் சோதனைகள் தொடர்பானதே தனது கேள்வி என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயர்கர் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தை அவமதிப்பதை தவிர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேவேளை எதிர்கட்சி தலைவர் நேற்று எழுப்பிய அதேகேள்வியை இன்றும் எழுப்புவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணர்டோ குற்றம்சாட்டினார்.