அரசாங்கத்திடம் செல்வாக்கிழந்த கருணா ! கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனம் இரத்து


நீண்டகாலமாக அம்பாறை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் இன்னும் இழுபறி நிலையில் காணப்படுகின்றது .  வெள்ளிக்கிழமையன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனத்தை நிறுத்தும்படி அம்பாறை அரச அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கணக்காளர் நியமனம் வழங்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன .

பாராளுமன்றத்தில் இது பேசும் பொருளாக காணப்பட்டது.  கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில்  சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு  கிழக்கிற்கு வந்திருந்த வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என   வாக்குறுதி அளித்திருந்தனர் .   
கடந்த பாராளமன்ற தேர்தலில் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா ) கல்முனையை தர முயர்த்தி தருவேன் என பிரச்சாரங்களில் கூறி வந்தார் . இதனை நம்பி கல்முனை பிரதேச மக்களும் தேர்தலில் கணிசமான வாக்குகளை அளித்திருந்தனர் . இதனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரநிதித்துவம் இல்லாமல் போனதுடன் அதாவுல்லா எம்.பி ஆகியுள்ளார் . 

இதனையடுத்து ஆளுநர் பதவி கிடைக்கும் என்றும் நம்பியிருந்தனர் கடைசியில் அதுவும் ஏமாற்றமே . பின்னர் பிரதமர் மஹிந்தவின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்  ஆனால் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை . 

நிறுத்தப்பட்ட கணக்காளர் நியமனத்தை தட்டி கேட்க திராணியற்றவராக விளங்குகிறார் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை  இல்லாமல் செய்யும் பணியே அவருக்கு வழங்கப்பட்ட்தாகவும் அதை அவர் செய்து விட்டார்  இப்பொழுது இருக்கும் மஹிந்த அரசாங்கத்தில் இவரை கணக்கெடுப்பதில்லை  என கூட்டமைப்பினர் விமர்சிக்கின்றனர். 

தேர்தல் பிரசாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவே பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் ஆனால் தற்போதைய  அரசாங்கம் ஹாரிஸ் எம்.பி போன்றவர்களை மதிக்கும் அளவிற்கு கருணாவை கணக்கெடுப்பதில்லை . 

அம்பாறை தமிழ் மக்கள் கருணாவின் தேர்தல் கால   உறுதிமொழியைக் கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என நம்பி கடைசியில் ஏமாற்றமே அடைந்துள்ளனர் .