சிறைச்சாலை வாழ்க்கை ஒரு கடினமானது.! எனது அரசியல் நகர்வுகளை சிறையில் இருந்தே திட்டமிட்டேன் - நேர்காணல்


போரட்டத்தில் என்ன நடந்தது? போரட்டத்தின் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து நூல் ஒன்றை எழுதுகின்றேன்.

சிறைச்சாலை வாழ்க்கை ஒரு கடினமானது. 61 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். சுமார் மூன்றறை வருடங்கள் தனி அறையில் இருந்தேன்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை அழிக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியது வேடிக்கையான விடயம்.

(காயத்திரி நளினகாந்தன்)
“என்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் உண்மைக்கு புறம்பான அரசியல் பழிவாங்கல். ஆகையால் என்னால் முழுப்பிரயத்தனத்துடன் இவ்வழக்கில் இருந்து விடுபட முடியும். எனினும் நீதிமன்றப்பொறிமுறையின் ஊடக வெளிவருவேன் என்ற நம்பியிருந்தேன். ஆனால் எங்கள் எதிரிகள் விட்டதவறுகள் மற்றும் பிழைகள் நாங்கள் செய்த நல்ல விடயங்கள் என்பனவற்றை மக்கள் உணரும் போது நாங்கள் பழிவாங்கப்பட்டு இருக்கின்றோம் என்ற கோட்டில் எல்லோரும் ஒன்றாக சந்திக்கும் போது – அதனை அரசியலாக்கும் திட்டத்தை நான் வகுத்திருந்தேன்” என்று கூறுகின்றார் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்).

சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் தனது சிறை வாழ்க்கை மற்றும் அரசியல் திட்டம்  தொடர்பில் பத்திரிகை  நேர்காணல் வருமாறு;

கேள்வி: நீண்டநாட்கள் விளக்கமறியல் கைதியாக சிறையில் இருந்துள்ளீர்கள் அந்த அனுபவம் தொடர்பாக கூறுங்கள்?

பதில்: சிறைச்சாலை வாழ்க்கை என்பது ஒரு கடினமான வாழ்க்கை. நான் கிட்டத்தட்ட 61 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். அதிலும் சுமார் மூன்றறை வருடங்கள் தனி அறையில் இருந்துள்ளேன். எனது அடுத்த அறையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்திருந்தார்கள்.அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாது கடும் சிரமத்தை எதிர்நோக்கினேன். சிறிய உடல் உபாதைகள் ஏற்படும் போது கூட மருத்துவ தேவைகளை பெறமுடியாது அவதியுற்றேன். எனினும் இயல்பாகவே நான் சமூக சிந்தனை கொண்ட போராளி என்ற இறுக்கமான மனநிலையில் இருந்ததால் இவற்றை எல்லாம் கடந்து வந்துள்ளேன்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி புத்தகம் வாசித்தல் மற்றும் பத்திரிகை வாசித்தல் என என்னை பழக்கப்படுத்திக்கொண்டேன். இருப்பினும் விளக்கமறியல் கைதிகள் குற்றம் நிருபிக்கப்படாத நிலையில் குற்றவாளிகள் போல நடத்துவது அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் பராமரித்தல் என்பவை அநீதியான விடயமாகவே நான் பார்க்கின்றேன். இது தொடர்பாக அரசு கூடிய கவனம் செலுத்தி முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்கவேண்டும்.

கேள்வி: உங்கள் அரசியல் வாழ்கையின் அரசியல் நகர்வை சிறையில் இருந்து திட்டமிட்டீர்களா?

பதில்: ஆம்! என்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் உண்மைக்கு புறம்பான அரசியல் பழிவாங்கல். ஆகையால் இதனை என்னால் முழுப்பிரயத்தனம் வழங்கி இவ்வழக்கில் இருந்து விடுபட முடியும். எனினும் நீதிமன்றப்பொறிமுறையின் ஊடக வெளிவருவேன் என்ற நம்பியிருந்தேன். ஆனால் எங்கள் எதிரிகள் விட்டதவறுகள் மற்றும் பிழைகள் நாங்கள் செய்த நல்ல விடயங்கள் என்பனவற்றை மக்கள் உணரும் போது நாங்கள் பழிவாங்கப்பட்டு இருக்கின்றோம் என்ற கோட்டில் எல்லோரும் ஒன்றாக சந்திக்கும் போது அதனை அரசியலாக்கும் திட்டத்தை நான் வகுத்திருந்தேன். அந்த அடிப்படையில் எனது கட்சி உள்ளுராட்சி மன்றத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலையும் வெற்றி கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

கேள்வி: சிறையில் இருந்து வெளியே வரும் போது மட்டக்களப்பு மக்கள் மனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தீர்களா?

பதில்: மக்கள் என் மீது பலமான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வைத்துள்ளார்கள். அதே நேரம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன தொற்றினால் மக்களின் எண்ணத்தின் வண்ணம் செயற்படமுடியாத நிலை காணப்படுகின்றது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற் உறுப்பினர் எனது வழக்கில் எனக்கு எதிராக செயற்பட்ட விதம் இவரது இரட்டை நிலப்பாட்டினை மக்கள் வெகுவாக புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யப்போவதில்லை. அவ்வாறு மக்களுக்காக இன்று உழைக்கும் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை இவர்கள் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை மிகத்தெளிவாக செய்து வருவதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். இதனால் எம்மோடு தோள்கொடுத்து திடசங்கற்துடன் செயற்படுவதை உணரக்கூடியதாக உள்ளது.

கேள்வி: மாவட்ட இணைத்தலைவர் என்ற வகையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் எவை?

பதில்: தற்போதையநிலையில் மிகமோசமான பொருளாதார பின்னடைவை மக்கள் சந்தித்துள்ளனர். குறிப்பாக கிராமியப்பொருளாதார உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பான விடயங்களில் நாம் முன்னுரிமை கொடுத்து வருமானத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களை கவனம் செலுத்துவோம்.

2021 ஆண்டு அரசதிட்டங்களாக பொருளாதார கல்வி உட்கட்டுமான பணிகளை விரைவாக அமுல்படுத்தலை நோக்காக கொண்டு செயலாற்றுவோம். மேலும் கல்வி தொடர்பாக கூடிய கவனம் செலுத்த உள்ளோம். அனைத்து பகுதிகளுக்கும் சமமான சமத்துவமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் திட்டங்களை வகுக்கவுள்ளோம். குறிப்பாக கிராம மட்டத்திற்கும் சரியான முறையில் வளங்கள் வழங்க்கப்படுவது தொடர்பாக ஆராய்ந்து செயற்படுத்த உள்ளோம்.

கேள்வி: கட்சி அரசியல் நகர்வு எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பாக கூறுங்கள்?

பதில்: எமது கட்சி ஒரு பிராந்தியக் கட்சி என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி இயங்குகின்ற கட்சியாக இருந்தாலும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் நமக்கும் அரைக்கு அரைவாசி என்ற நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளோம். இருப்பினும் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபட வேண்டும் அடிப்படையில் நாம் தேர்தலில் பங்கு பெற்றாமையால் அவ்வாறன ஒரு சூழல் இல்லை.

எனினும் இவ்விரு மாவட்டங்களிலும் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்காத முறையில் மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின் அணிதிரளகூடிய வகையில் சாத்தியமான முறையில் திட்டங்களை வகுத்துள்ளோம். அதனை உடனடியாகவும் நீண்டகாலத் திட்டமாகவும் வகுத்துள்ளோம் விரைவில் செயற்படுத்த காத்திருக்கின்றோம்.

கேள்வி: புதிய அரசியல் யாப்பு வரைதல் தொடர்பாக உங்கள் கட்சி ரீதியாக முன்வைக்கும் முன்மொழிகள் எவை?

பதில்: நடைமுறைக்கு சாத்தியமான விடயத்தை முன்வைத்தே எமது கட்சியின் நிலைப்பாடு அமையும். குறிப்பாக மாகாணசபை முறைமைக்கே கூடிய அழுத்தம் பிரயோகிப்போம். இதன் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்பட்டு வருகின்றது. முதலில் மாகாண சபை முறைமையை ஏற்று நடத்திகாட்டிய பெருமை எனக்கும் எனது கட்சிக்கும் மட்டுமே உண்டு. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அதே நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதும் மாகாணசபை முறை அபிவிருத்திக்கு தேவை என்ற அடிப்படையில் இயங்க ஆரம்பித்துள்ளமையும் இவர்களுக்கு முன்னோடியாக எமது கட்சி உள்ளமையினை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. ஆகவே தற்போதுள்ள மாகாணசபை முறைமையை பலப்படுத்தி அதிகார பரவலாக்கம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவுள்ளோம். இதனையே தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்வைத்திருக்கின்றோம்.

இதில் வெளிப்படைதன்மையுடனே செயல்படுகின்றோம். தமிழ் மக்களுக்கு ஒரு சொற் பிரயோகம் சிங்கள மக்களுக்கு வேறு சொற்பிரயோகம் என்று மக்களை ஏமாற்றாது எல்லா மக்களுக்கும் விளங்கக்கூடிய வகையில் வசனப் பிரயோகங்களை வெளிப்படையாக முன் வைத்துள்ளோம்.

கேள்வி: மயிலத்தனை மேய்ச்சல் நிலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையை நீங்கள் எவ்வாறு கையாளுகின்றீர்கள் ?

பதில்: நானும் ஆட்சியாளர்களின் பங்குதாரி என்றவகையில் இப்பிரச்சனையை அணுகமுடிந்த போதும் அரசுடன் இணைந்த கடும் போக்கு அரசியல் வாதிகள் இது ஒரு பௌத்த நாடு, இங்கு மாடுகள் வதைப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதனை “மாட்டிறைச்சி அரசியல்” எனறும் பார்க்கலாம்.

இது ஒரு புறம் இருக்க கிழக்குமாகணத்தை பொறுத்தவரை காலம் காலமாக மாடுவளர்ப்பும், பண்ணை முறையும் இதன்வழி போடிமார் செல்வாக்கு போன்ற அம்சங்கள் கொண்ட நீண்ட வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட துறையாகும். இருப்பினும் தற்போது உத்தியோகப்பற்றற்ற கணக்கெடுப்பின் மூலம் சுமார் 500000 ற்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கும் நிலையில் 100000 மாடுகள் வரையே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையானது அரசாங்கம் இதனை சரியான முறையில் திட்டமிடுதலில் பாரிய சவாலை உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் சுய உற்பத்தி துறையை அதிகரிக்கும் கொள்கை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தி;ற்கு சொந்தமான காணியினை பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் என்ற அடிப்படையில் கபளிகரம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஆயினும் மாகாவலி அதிகார சபைக்கு ஒதுக்கிய இந்த மட்டகளப்பு மாவட்ட காணியாது மேச்சல் தரை என்பது யதார்த்தமானது. ஆகவே மாடுகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் அவற்றுக்கு தேவையான மேச்சல் தரையினை மாவட்ட எல்லை நிர்வாகத்துடன் தீர்த்து சட்டரீதியாக பாதுகாப்பான மாடு வளர்ப்பினையும் பண்ணையாளார்களையும் பாதுகாப்பதென்பதில் திடசங்கட்பம் பூண்டு உள்ளேன்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதனை கிழக்கு மாகாணத்தில் உணர்வூட்டி அரசியல் செய்ய எத்தனிப்பதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியலை அஸ்தமிக்க செய்யும் ஒரு முயற்சியாகவே இதை காண்கின்றேன். ஏனெனில் வடகிழக்கு பிரிப்பு அதியுயர் பாதுகாப்பு வலயம் அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றில் காட்டியிருக்க வேண்டிய சட்ட நடவடிக்கை வேகத்தை மேச்சல் தரை விவகாரத்தில் காட்டியிருப்பது நீதிமன்ற நடவடிக்கை மூலம் இழுத்தடித்து அதனை தமது அரசியலுக்கான பகடையாக உபயோகிக்கவே எனவே இவ்வகையான விடயங்களை தவிர்த்து மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்குவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறையல் தீர்வினை நான் எமது மக்களுக்கு பெற்று கொடுப்பேன் என்பதில் நம்பிக்கை உள்ளவனாக இருக்கின்றேன்.

கேள்வி: அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: அரசியல் கைதிகள் விடயம் மிகவிரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் பயங்கரவாத சட்டம் கொடுமையானது அதனை இல்லாது ஒழிக்கவேண்டும் என்று ஐநா வரை கொண்டு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை அழிக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியது வேடிக்கையான விடயம். இவர்களிடம் ஒருபோதும் தெளிவான நிலைப்பாடு இருந்தது இல்லை. மனித உரிமைமீறலான சட்டம் என்றால் எல்லோரும் சேர்ந்து அகற்ற வேண்டும். இது ஒருவருக்கு ஒரு நீதியாகவும் மற்றயவர்களுக்கு வேறுவிதமாகவும் பயன்படுத்த முடியாது இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாட்டை பாறைசாற்றியுள்ளது.

மேலும் நல்லாட்சி அரசாங்ககாலத்தில் பயங்கரவாத சட்டத்தை இல்லாது ஒழிக்கும் சந்தர்ப்பம் இருந்தபோதும் இச்சட்டம் நீக்கப்பட்டால் பிள்னையானை விடுவிக்கவேண்டிவரும் என்ற ஒரே காரணத்தினாலே அச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைக்க துணைபோனவர்கள் கூட்டமைப்பினர் என்பது கசப்பான உண்மை. இதனை இன்று மக்கள் புரிந்துள்ளார்கள்.

கேள்வி: அரசியல்வாதிக்கு அப்பால் எழுத்தாளார் என்ற வகையில் “வேட்கை” புத்தகம் தொடர்பாகவும் தங்களின் எதிர்கால படைப்புக்கள் தொடர்பாகவும் கூறுங்கள்?

பதில்: “வேட்கை” புத்தகம் சிறையில் இருந்தபோது எழுதினேன். இருந்தபோதும் கைதி என்ற அடிப்படையில் சில வரையறைகள் இருந்தது எனினும் அந்த நேரத்தில் இருந்த சூழலை தேவைக்குகேற்ப பயன்படுத்தி கொண்டேன். அன்றைய அரசியலுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. வேட்கையை அடிப்படையாக கொண்டு எமது போரட்டத்தில் என்ன நடந்தது? போரட்டத்தின் போக்கு இறுதியில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது பற்றியும் கிழக்கு மக்களின் தனித்துவமான அரசியல் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உருவாக்கம் தொடர்பாகவும் விரிவான விடயங்கள் அடங்கிய நூலை ஆக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுக்கொண்டு உள்ளேன். 2021 இறுதிப் பகுதியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன்.