ரிஷாட் வீட்டிலிருந்த இளைஞர் தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்தார் ! - ஆர்.ரஞ்சினி


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த ஹிஷாலினியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றார் என்றும் அவரது தாயார் ரஞ்சினி குறிப்பிட்டார்.

ரிஷாட் எம்.பியின் வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தெரிவித்துக் கொண்டிருந்தபோது, தனது மகளிடமிருந்து தொலைபேசியைப் பறித்த அந்த இளைஞர், ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்துப் பேசுகிறார் என்று தன்னிடம் கூறியதாக ஹிஷாலினியின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அடிக்க வேண்டாம் என ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என்று தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.