மாமனாரின் கையை துண்டித்து ஆற்றில் வீசிய மருமகன் கைதுகிளிநொச்சி – கண்டாவளையில் மருமகனின் தாக்குதலால் இடது கை துண்டிக்கப்பட்ட 57 வயதான மாமனார் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிசிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

காணி பிணக்கு காரணமாக நேற்று (11) மாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இன்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதுவரை காலமும் விவசாயம் செய்து வந்த மாமனாரின் காணி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மாமனாரின் இடது கை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மருமகன் கண்டாவளையில் ஆற்றில் வீசியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 37 வயதான மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.