கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் - 2022


கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம், கடந்த 2012 ஆண்டு தொடக்கம் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினரின் ஒருங்கமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதுவரை இப்புலமைப் பரிசில் திட்டத்தினூடாக 84 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 18 மருத்துவத்துறை மாணவர்களும், 36 பொறியியல்துறை மாணவர்களும், 20 சட்டத்துறை மாணவர்களும், ஏனைய விசேட துறைகளுக்காக 10 மாணவர்களும் உள்ளடங்குகின்றார்கள்.

இவர்களில் தங்களது பல்கலைக்கழக கல்வியை முடித்து மருத்துவர்களாக ஒருவரும், பொறியியலாளர்களாக 12 பேரும், சட்டத்துறையில் பூர்த்தி செய்த 05 பேரும், விசேட துறை பட்டதாரிகளாக 05 பேருமாக மொத்தம் 23 பேர் தங்களது பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்களில் மருத்துவம், பொறியியல் துறை கல்வியை மேற்கொண்ட அனைவரும் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன் அகில இலங்கைப் பொறியியல் சேவைப் போட்டிப் பரீட்சையில் மூவர் தெரிவாகி அரச சேவைப் பொறியியல் துறைக்கு (Sri Lanka Engineering Service ) உள்வாங்கப்பட்டு பெருமை சேர்த்துள்ளனர். ஏனைய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருவர் விரிவுரையாளர்களாகவும் ஏனையோர் மேற்படிப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர். சட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த 5 மாணவர்களும் சட்டத்தரணியாவதற்குரிய கற்கையை கொழும்பு சட்ட கல்லூரியில்  மேற்கொண்டுள்ளார்கள்.

மனித இனத்திற்கு ஏற்பட்ட கொரோனா அனர்த்தத்தின் போதும் நன்கொடையாளர்கள் இப்புலமைப் பரிசில் திட்டம் தொடர்வதற்கு உறுதுணையாகவிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். உலகமே என்றும் எதிர்கொள்ளாத இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் நிதியுதவியளிக்கும் இந்த நன்கொடையாளர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க கடமைப்பட்டுள்ளோம். இச்செயலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நிதியாளர்கள் மேலும் திடகாத்திரம் பூண்டுள்ளனர் என்பதையும் மகிழ்சியுடன் குறிப்பிட விரும்புகின்றோம்.

இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கு நிதியளிப்பாளர்களாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் சிவகாமி பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு,திருமதி பரமேஸ்வரன், ரெயின்வோ பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு.திருமதி நிர்மலன், சிறிசக்தி பவுண்டேசன் அமைப்பின் கலாநிதி.சிறிஸ்கந்தராஜா திருமதி சிறிஸ்கந்தராஜா, Dr.இராஜசுந்தரம் திருமதி இராஜசுந்தரம், திரு.திருமதி ரெட்ணசிங்கம் (சட்டத்தரணிகள்), சரஸ்வதி பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி மனோகரன், சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி சுகுமார் ஆகியோருடன் மட்டக்களப்பு SUNSHINE உரிமையாளர் திரு/திருமதி நந்தகுமார், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு/திருமதி சிவலிங்கம் சோமஸ்கந்தன் ஆகியோர் நிதியுதவி வழங்கிக் கொண்டுடிருக்கின்றார்கள்.

புலமைப் பரிசில் கொடுப்பனவாக மருத்துவத் துறைக்கு மாதாந்தம் 8000.00 ரூபாவும், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு மாதாந்தம் 7000.00 வழங்கப்படுகின்றது. இத்தொகையானது அவர்களது பல்கலைக்கழக கல்வி நிறைவு பெறும் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை நன்கொடையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இச்செயற்பாட்டிற்கு இணைப்பாளர்களாக சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினர் செயற்படுகின்றனர்.

மேலும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினரின் ஒழுங்கமைப்பினூடாக பின்தங்கிய பிரதேச மாணவர்களை உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் கற்பதனை ஊக்குவிக்கும் முகமாக தரம் 9, 10, 11 வகுப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை உள்வாங்கி மூன்று அல்லது நான்கு பாடசாலைகளை உள்ளடக்கிய திறமையான வளவாளர்களைக் கொண்டு விடுமுறை நாட்களில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்தப்படுகின்றது. அத்துடன் பின்தங்கிய பகுதிகளில் க.பொ.த. சாதாரண தரத்தில் திறமையான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை உள்வாங்கி அவர்களை நகரை அண்டிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கற்பதற்கும், அவர்களின் பிரத்தியேக வகுப்புகளுக்குரிய ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படுகின்றது. மேலும் இச்செயற்பாட்டினூடாக இன்றுவரை 50 மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். இவ்வனைத்துச் செயற்பாடுகளும் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்லப்படுவதில் பெருமையடைகின்றோம்.

இவ்வருடத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் எதிர்வரும் 20.12.2021 ஆந் திகதிக்கு முன்பாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவு புலமைப்பரிசில்களே வழங்கப்படுவதனால் பொருளாதார உதவி அதிகம் தேவைப்படுபவர்கள் முன்னுரிமைப் படுத்தப்படுவார்கள்.

திரு. சோ. சிவலிங்கம்,
( ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ),
தலைவர், சங்காரவேல் பவுண்டேசன்,
இல. 186, புதிய கல்முனை வீதி,
கல்லடி, மட்டக்களப்பு

விண்ணப்பம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Click here for download 
https://drive.google.com/file/d/1_lHcwARg7s1yxNnROhTj8et12odg4guh/view?usp=sharing