கஷ்ட பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு துணைநின்ற அமரர் சோ.சிவலிங்கம்

 


மீன் பாடும் தேனாடாம் மட்டுநகரின் கல்லடியில் 23.09.1930யில் பிறந்த , தலைவர் அமரர் சோ.சிவலிங்கம் ஐயா அவர்கள் , தனது ஆரம்பக்கல்வியை கல்லடி உப்போடை இராமகிருஸ்ண விவேகானந்த மகளிர் கல்லூரியில் கற்று, மேலும் சென்னை மாநகரத்தில் உள்ள Presidency College வரை சென்று தனது விஞ்ஞான இளங்கலை பட்டப்படிப்பினை நிறைவுசெய்தார். பின்னர் ஆசிரியராக தனது சேவையை சிவானந்தா தேசிய பாடசாலையில் ஆரம்பித்து, பல பாடசாலைகளில் அதிபராகவும் , மட்டக்களப்பு மாவட்ட விஞ்ஞான உதவிக் கல்வி பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வுநிலையை அடைந்தார். 

இவருடைய கல்வியறிவு மற்றும் இவர் கல்விச்சேவையில் பெற்ற அனுபவம் என்பன எமது சங்காரவேல் பவுன்டேசன் அமைப்பின் கல்விச் செயற்திட்டங்களை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக முன்னேற்றகரமாக  முன்னெடுத்துச் செல்வதற்கு இன்றியமையாததாக அமைந்தது. 

சங்காரவேல் பவுன்டேசன் அமைப்பானது தமது கல்விப் பணியை துரடல 2013 அன்று வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையில் க.பொ.த(உ/த) மாணவர்களுக்கான புலைமைப் பரிசில் திட்டத்தினூடாக ஆரம்பித்த போது, எமது அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் அன்றிலிருந்து ஏற்று, இவ் புலமைப் பரிசில் திட்டம் மட்டுமல்லாது இதன் தொடர்ச்சியாக மேலும் பல கல்வித்திட்டங்களை உள்வாங்கி, குறிப்பாக  கஷ்ட பிரதேச மாணவர்களின் கல்வியில் முன்னேற்றத்தை   கொண்டு வரும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுக்கும் அச்சாணியாக இருந்து இறுதி மூச்சு வரையும் செயற்பட்டதையிட்டு பெருமைப்படுகின்றோம். 

அமரர் சோ.சிவலிங்கம் அவர்கள் எமது அமைப்பின் தலைவர் மட்டுமன்றி ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் , உறுதி மற்றும் நேர்த்தியான  தலைவராகவும் செயற்பட்டது மட்டுமல்லாது  தனது வயதையும் பொருட்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி வரை எமது அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான  புலைமைப்பரிசில் திட்டம், க.பொ.த(உ/த) மாணவர்களுக்கான புலைமைப்பரிசில் திட்டம் , மற்றும் க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் சம்பந்தமான மாணவர்களின் தெரிவுகள், மற்றும் வகுப்புகள் சமபந்தமான கள விஜயங்களை அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொள்ளும் போது அமரரும் எம்மோடு இணைந்து, முல்லைத்தீவு மாவட்டம் தொடக்கம் திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் வரையும் பயணித்து அமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் ஊக்குவிக்கும் அவருடைய இச் செயலானது, எங்கள் அனைவருக்கும் உந்து சக்கியாகவும் அமைந்தது.


நாம் மேற்கொள்ளும் கஷ்ட பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கான கல்வித் திட்டங்களில் நிதி அனுசரனையில் ஒரு தொகுதி சங்காரவேல் பவுன்டேசன் அமைப்பினூடாகவும், மற்றைய ஒரு பகுதி நிதி குறிப்பாக இலண்டனை மையமாக கொண்ட அமைப்புகளினாலும்;, மற்றும் தனிநபர்களினாலும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நிதி அனுசரனையாளர்கள் கள விஜயம் மேற்கொள்ளும் வேளைகளில் அமரர் சோ. சிவலிங்கம் அவர்களின் அனுகுமுறை, அனுபவமுள்ள செயற்பாடு மேலும் அவருக்கு சைவ சமயத்தில் உள்ள ஈடுபாடு மற்றும் அவருடைய ஆங்கில மொழியில் உள்ள புலமைத்துவம் என்பன அனைத்து வளவாளர்களின் நன்மதிப்பையும் தொடர்ச்சியாக பெற வழிவகுத்தது. இந்தவகையில் எமது அமைப்பால் மேற்கொள்ளப்படும் அனைத்து கல்வித் திட்டங்களும் அமுல்படுத்துவதற்குரிய நிதியை தங்கு தடையின்றி பெற முடிந்தது. இதற்குரிய பெருமை அமரர் அவர்களையே சாரும். 

அமரர் அவர்கள்  தனது இறுதி நாள் வரை எம்முடன் பயணித்து, அவர் பொறுப்பேற்றுக் கொண்ட அனைத்து மனிதாபிமான மற்றும் சமூகப் பணிகளிலும் தன்னை 100% ஈடுபடுத்தி செயற்பட்ட ஒர்  பெருந்தகையாவார். அந்தவகையில் அவருடைய திடீர் சுகவீனம் ஏற்படுவதற்கு முன்னுள்ள சில மணித்தியாலங்கள் வரையும், அவருடைய எண்ணப்பாடுகளில் ஒன்று கஷ்ட பிரதேச மாணவர்களின் கல்வியில் முன்னேற்றத்தை கொண்டு வரும் முயற்சியுமாகும். இறுதியாக  எமது அமைப்பினால் மேற்கொள்ளப்படும்  zoom  தொழில்நுட்பம் ஊடான  பாரிய கல்வித் செயற்த்திட்டம் தொர்பாக அவர் பலருடனும் மேற்கொண்ட சம்பாசனைகள் அன்னாரின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட பலர் எம்முடன் தெரிவித்தபோது உணரக்கூடியதாக இருந்தது. 

கடந்த ஒன்பது வருட காலப்பகுதியில் எமது அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கல்வி செயற்பாட்டிற்கும் அமரர் சோ. சிவலிங்கம் அவர்களின் பங்களிப்பானது அளப்பெரியது. அவரது சிறந்த தலைமைத்துவமானது ,எமது அமைப்பின் கல்விச் செயற்பாட்டின் ஊடாக இன்றுவரை பல நூறு மாணவர்களில் ஒரு பகுதியினர் சிறந்த முறையில் தமது கல்வியை கற்று முடிப்பதற்கும், மேலும் ஒரு பெருந்தொகையினர் தமது கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கும் வழிவகுத்துள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். அன்னாரின் அமரத்தவம் அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி எமது சமூகத்திற்கும் மற்றும் எமது அமைப்பிற்கும் ஒரு பாரிய இழப்பாகும்.  

 - சங்காரவேல் பவுன்டேசன் -