காணாமலாக்கப்பட்டோர் , கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடிக்கு வருகை !


காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளது.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்களை உறவினர்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும் என படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பான ஏறாவூர் ஞாபகார்த்தப் பேரவையால் பொதுமக்களுக்கு பொது அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் விடுக்கப்பட்ட பொது அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும் திங்கட்கிழமை (26) காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளது.

“எனவே, அந்தச் சந்தர்ப்பத்தில் ஆணைன்குழு முன் தோன்றி, பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்திலிருந்து காணாமலாக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு இல்லாமலாக்கப்பட்டோரின் விவரங்களைச் சமர்ப்பித்து சாட்சியங்களைப் பதிவு செய்ய முடியும்.

“இவ்விடயம் குறித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்களில் விவரங்களைச் சமர்ப்பிக்க முடியும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.