கொரிய குடியரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் லீ ஜங்-ஸிக் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் கொரியாவின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கொரிய குடியரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் லீ ஜங்-ஸிக் குறிப்பிடுகையில், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு அமைய கொரிய வேலைவாய்ப்பு அனுமதி முறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
விசேடமாக இந்த மறுசீரமைப்பின் ஊடாக இலங்கைக்கான வாய்ப்புக்களைப் பல்வேறு கைத்தொழில் துறைகளுக்கும் விசேட சேவைத் துறைக்கும் விரிவுபடுத்த தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையர்களுக்கு கொரிய மொழியை கற்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த கொரிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உற்பட கொரியாவின் ஏனைய ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களை மேலும் தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கொரியாவிலுள்ள இலங்கை தொழிலாளர்களால் இலங்கை பொருளாதாரத்துக்கு அதிகளவு பலனளிப்பதாகவும்,இலங்கை பணியாளர்களுக்குப் பல்வேறு வேலைவாய்ப்புத் துறைகளில் பணியாற்றுவதற்கு அதிக சந்தர்ப்பம் வழங்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இலங்கைக்குத் தொடர்ந்தும் வழங்கிவரும் உதவிகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.