கிழக்கு மாகாண முன்பள்ளி அபிவிருத்திக்கான கல்விப் பாடத்திட்ட ஆசிரியர் கைநூல் மற்றும் பாடவிதான மீளாய்வும் உருவாக்கமும் மூன்றுநாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பு கிறீன் ஹோட்டலில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் ஆரம்பமான இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.எம்.அசீஸ் கலந்துகொண்டுஆரம்பித்துவைத்தார்.
ஏனைய மாகாணங்களில் முன்பள்ளிச் சிறார்களுக்கான பாடவிதானம் மற்றும் ஆசிரியர் கைநூல் என்பன உள்ளபோதும் கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டரை வருடமான நிலையிலும் இதுவரை பாடவிதானமோ ஆசிரியர் கைநூலோ இல்லாததினால் முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தியில் பல குறைபாடுகள் இருப்பதனால் அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.
பிளான் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் இவ் வேலைத்திட்டத்தினூடாக கிழக்குமாகாண கலை கலாசாரம் பண்பாடுகளை உள்ளடக்கியதாக தமிழ்,சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் 88 இலட்சம் ரூபா செலவில் பாடவிதானம் மற்றும் ஆசிரியர் கைநூல் என்பன உருவாக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகியுள்ள இவ் மூன்று நாள் செயலமர்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள்,எழுத்தாளர்கள்,முன்பள்ளி கல்வி அபிவிருத்திப் பணியக பணிப்பாளர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் இச் செயலமர்வில் கலந்துகொண்டுள்ளதுடன் இவர்களால் செயலமர்வு முடிவில் கிழக்கு மாகாணத்துக்கான முன்பள்ளி சிறார்களுக்கான பாடவிதானம் மற்றம் ஆசிரியர் கைநூல் என்பன உருவாக்கப்படும்.