தாண்டவன்வெளி காணிக்கை அன்னைக்கு இன்று பெருவிழா.

(உ.உதயகாந்த்)

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வெளி காணிக்கை அன்னையின் பெருவிழா கூட்டு சிறப்பு திருப்பலியானது இன்று (02) ஞாயிற்றுக்கிழமை காலை 6.45  மணியளவில் ஆரம்பமாகி காலை 10.00 மணியளவில் திருக்கொடி இறக்கும் நிகழ்வுடன் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

மறைக்கல்வி மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை ஒலி முழங்க  மட் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை வரவேற்கப்பட்டதுடன், ஆயர் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


திருவிழா திருப்பலியின் போது திவ்விய நற்கருணை , உருதிப்பூசுதல் ஆகிய திருவருட் சாதனங்களும் ஆயரினால் வழங்கப்பட்டது.  மேலும் இச் சிறப்பு திருப்பலியில் அதிகளவிலான அருட் தந்தையர்களும், அருட் சகோதரிகளும் , நற்கருணைப் பணியாளர்களும் கலந்து கொண்டு திருவிழா திருப்பலியினை சிறப்பித்தார்கள்.

அன்னையின் பெருவிழா திருப்பலியினை சிறப்பித்து அன்னையின் அருலாசியினைப் பெறுவதற்காக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இறைமக்கள் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து வருகைதந்து திருவிழாவில் கலந்துகொண்டதுடன், விழா நிறைவில் சுதந்திரன் விளையாட்டு கழகத்தின் தலைமையில்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

அன்னையின் பெருவிழாவினை சிறப்பிக்குமுகமாக திருப்பலி நிறைவில் ஆலய பங்கு தந்தை மற்றும் மேய்ப்புப் பணிச்சபையினரும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட வினோத விளையாட்டு  நிகழ்வுகளும்  இடம்பெற்றது.