(படுவான் பாலகன் ) மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் கோடைகாலங்களில் குறிப்பாக யூன் மாதம் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் இறுதிவரை குடிநீருக்காக மக்கள் போராடும் நிலைமை இருந்துகொண்டிருப்பதாக இப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் தற்போது குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் திட்டத்திற்கமைய பல்வேறு கிராமங்கள் உள்வாங்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒருசில கிராமங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என அறியமுடிகின்றது. திட்டத்தில் உள்வாங்கப்படாத கிராமங்களே அதிகளவில் குடிநீருக்காக
போராடும் கிராமங்களாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அதற்கமைய விடுதிக்கல் கிராமத்திலும் இத்திட்டம் மேற்கொள்ளப்படவில்லை என அக்கிராமத்து மக்கள் குறிப்பிடுக்கின்றனர். சித்திரை மாதத்தில் இருந்து இன்றுவரை குடிநீருக்காக விடுதிக்கல் மக்கள் 1கிலோமீற்றருக்கு மேல் உள்ள மாவடிமுன்மாரி கிராமத்திற்கு சென்றே குடிநீரை பெறும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. தங்களது கிராம சூழலில் உள்ள கிணறுகள் நீரின்றி வற்றியுள்ளதால் இவ்வாறு நீண்ட தூரம் குடிநீரை பெறுவதற்கும், குளிப்பதற்கும் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
நீண்ட தூரம் சென்று கலன்களில் நீரை பெற்றுவரும் இவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று தடவைகளுக்கு மேல் செல்லவேண்டி இருப்பதாகவும், உதவியின்றி இருக்கும் குடும்பங்கள் நீரை பெறச்செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே தங்களுக்கான குடிநீரினை உடனடியாக பெற்றுத்தருமாறும் இப்பிரதேசத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மண்முனை தென்மேற்கு பிரதேசசபை செயலாளரிடம் கேட்டபோது குடிநீர் இல்லாத இடங்களுக்கு வவுசர் மூலமாக நீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
