(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமசேவையாளர் பிரிவில் விடுதிக்கல் கிராம மக்களின் குடியிருப்புக்களுக்கு அண்மையில் அமைந்துள்ள கழிவுகள் கொண்டப்படும் இடத்தினால் பல்வேறு அசௌகரியங்களை அப்பிரதேசத்து மக்கள் எதிர்கொள்வதாக குறிப்பிடுகின்றனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கழிவுகளும் விடுதிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள பிரதேசசபைக்கு சொந்தமானது என கூறப்படும் ஒரு மேட்டுநிலப்பகுதியில் கொட்டப்படுகின்றது.
இங்கு பிளாஸ்ரிக், கண்ணாடி, வீட்டுக்கழிவுகள், வைத்தியசாலை கழிவுகள், தலைமுடிகள் போன்ற பல்வேறு விதமான பொருட்கள் கொட்டப்படுவதினால் அங்கு நாற்றம் வீசுவதாகவும், கழிவுகளில் மொய்க்கும் இலையான்கள் தமது உணவுகளிலும், தங்களிலும் மொய்க்கின்றதாகவும் இதனால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதுடன் உணவு உண்ணும் போது மிகுந்த சிரமத்தின் மத்தியிலே உண்பதாகவும், கழிவு கொட்டப்படும் இடம் குடியிருப்புக்களுக்கு அண்மையில் அமைந்துள்ளதால் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் பக்கத்தில் உள்ள கழிவுகளை வீடுகளுக்கு கொண்டுவருவதாகவும், மழைகாலங்களில் கழிவுகள் மழைநீரில் நனைந்து நீரால் அடித்துச்செல்லப்பட்டு பக்கத்தில் உள்ள வயல்நிலங்களுக்குள்ளும், வாய்க்கால்கள் ஊடாகவும் நீரோடு நீராக செல்கின்றது. குறித்த வாய்க்காலில் செல்லும் நீரில் அப்பிரதேசத்து மக்கள் குளிப்பதாகவும், குறித்த நீர் குளங்களில், ஆறுகளில் சங்கமிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது கழிவுகள் கொண்டப்படும் இடத்தில் பயிர் செய்கை மற்றும் விலங்கு போன்றவை வளர்ப்பதற்காக இந்நிலம் ஒதுக்கப்படுவதாகவும் இதன்மூலமாக இக்கிராமத்தினை சுற்றியுள்ள 15க்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறி ஆரம்பத்தில் வேலி அடைக்கப்பட்டு ஒருவருடம் பயிர்கள் செய்கைப் பண்ணப்பட்டதாகவும் பின்பு கழிவுகளை கொட்ட ஆரம்பித்துள்ளதாகவும் இப்பிரதேசத்து மக்கள் குறிப்பிடுகின்றனர். தம்மிடம் பயிர் செய்கை, விலங்கு போன்றவற்றிற்கான இடமே என்று கூறிவிட்டு தம்மை தற்போது ஏமாற்றி உள்ளதாகவும். இது தொடர்பில் அரசியல்வாதிகள், பிரதேசசபை செயலாளர், பிரதேச செயலாளர் போன்றோரிடம் முறையிட்டும் கடிதங்கள் வழங்கியும் எவ்விதமான தீர்வும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அப்பிரதேசத்து மக்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இதற்கான தீர்வை தமக்கு உடனடியாக பெற்றுத்தருமாறும் அப்பிரதேசத்து மக்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மண்முனை தென்மேற்கு பிரதேசசபை செயலாளரிடம் கேட்டபோது. தான் தற்போதுதான் இப்பிரதேசசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியை பார்வையிட்டு கழிவுகளை மீள்சூழற்சி செய்வதற்கான வேலைகளையும், அண்மையில் உள்ள மக்களுக்கு பாதிப்பு, சுகாதாரசீர்கேடு இடம்பெறாவண்ணம் மாற்றுத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
