பட்டிப்பளைப் பிரதேசத்தில் குடியிருக்க நிலங்கள் இல்லாமல் போகும் அபாயம்

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஆற்றுமண், நிரப்பு மண் போன்றன அகழ்ந்தெடுக்கப்பட்டு பிரதேசத்தினை விட்டு ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் மக்கள் குடியிருக்க கூடிய மேட்டு நிலங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றது. எதிர்காலத்தில் மக்கள் குடியேறி வாழ்வதற்கான நிலங்கள் இல்லாமல் செல்கின்ற நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஆற்றுமண் அகழ்வதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் கூறினார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பிலும் இதனை எவ்வாறு தடைசெய்வது என்பது குறித்தான அமைப்புக்களுடான கலந்துரையாடல் திங்கட்கிழமை(05)இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில் ஆற்றுமண் ஏற்றுவதற்காக பிரதேசத்தில் ஒருவருக்கே அனுமதி வழங்கப்பட்டதான நிலையில் பலர் ஆற்றுமண் ஏற்றுவதாகவும் தகவல் கிடைக்கின்றன அதேவேளை குறித்த இடத்தினை விட வேறு இடங்களிலும் ஏற்றுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால் பிரதேசத்தின் வளங்கள் சூறையாடப்படுகின்றது. பிரதேசத்தில் காணப்பட்ட மேட்டு நிலங்கள் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மக்கள் குடியேறுவதற்கு இடங்கள் இல்லாத நிலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இவ்வாறான விடயங்கள் பற்றி இப்பிரதேசத்தில் உள்ள மக்களே சிந்தித்து அக்கரையுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டதான் பிரதேசத்தின் வளங்களை பாதுகாக்க முடியும் என்றார்.