(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 36ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக மண்முனை தென்மேற்கு அபிவிருத்தி கூட்டத்தில் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் குறிப்பிட்டார். குறித்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தேசிய கல்வியல் கல்லூரியில் இருந்து வெளியேறி அண்மையில் நியமனம் வழங்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய பிரதமர் இதனை செய்வதாக குறிப்பிட்டிருக்கின்றார். இதன்மூலமாக சிறிய ஆசிரிய ஆளணி பிரச்சினையை குறைக்க முடியும் எனக்குறிப்பிட்டார்.
மேலும் வலயங்களுக்கு இடையில் ஆசிரியர் சமப்படுத்தல் இன்மையால் நகர்புற வலயங்களில் ஆசிரிய ஆளணி மேலதிகமாக இருக்கின்றமையினால் மாகாணப்பணிப்பாளர், வலயக்கல்விப்பணிப்பாளர், அரசியல் வாதிகள் உள்ளடங்கலாக ஒன்றுகூடல் ஒன்றினை அமைத்து அதன்மூலமாக மேலதிகமாக உள்ள வலயங்களில் இருக்கின்ற ஆசிரியர்களை தேவையான வலயங்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க இதனை ஏற்பாடு செய்வதற்கு முடிவு செய்யும் படி பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டதற்கமைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மாகாணத்தின் கீழ் அமைந்துள்ளதினால் மாகாணசபை இதற்கான தீர்வுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக்கூறப்பட்டது. இதற்கு கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இதுதொடர்பில் மாகாணசபையிலும் தொடர்ச்சியாக தாம் பேசி வருவதாகவும் தற்போதைய நிலையில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்குவதற்குரிய செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டத்தில் 104ஆசிரியருக்கான வெற்றிடங்கள் உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
