கல்விப்பொதுத்தராதர பரீட்சை நடைபெற்ற போது வெடிச்சத்தம் கேட்டு அன்று மாணவர்கள் ஓடினர். இன்று சுதந்திரமாக ஆசிரியர் தினம் நடாத்துகின்றோம்.

(படுவான் பாலகன்) கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை 1993ம் ஆண்டு மகிழடித்தீவு பாடசாலையில் சமயபாடம் நடைபெற்ற போது வெடிச்சத்தம்; அதிகமாக கேட்டது. இதன்போது பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் மண்டபத்தினை விட்டு ஓடினர். அப்போது மாணவர்களிடமிருந்து பரீட்சை வினாத்தாளினை சேகரித்து எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் இன்று அதே மண்டபத்தில் சுதந்திரமாக ஆசிரிய தினவிழாவினை நடாத்துகின்றோம் என மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் குறிப்பிட்டார்.

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை(06) நடைபெற்ற போது அதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனை தெரிவித்தார்.

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பிரதான மேற்பார்வையாளராக கடமையாற்றிய போதே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறினார். சுதந்திரமும், வசதி வாய்ப்புக்களும் உள்ள இக்காலத்தில் சிறப்பாக மாணவர்கள் கற்று சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களிலேயே எமது கோட்டத்து மாணவர்கள் குறைந்தளவான சித்திகளை பெறுகின்றனர். இப்பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார்.