மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தினால் பல்வேறு திட்டங்கள்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்திவரும் பாம் பவுண்டேசன் நிறுவனம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலும் குடிநீர்வசதி, கால்வாய் துப்பரவு, மரநடுகை, திறன் அபிவிருத்தி, சுகாதாரமேம்பாடு, பால்நிலை சமத்துவம் போன்ற செயற்றிட்டங்களை செய்யவுள்ளதாக நிறுவனத்தின் நீர் வழங்கல் திட்டத்தின் முகாமையாளர் அ.சக்தி குறிப்பிட்டார்.


மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் முன்னெடுக்கவிருக்கும் செயற்றிட்டங்கள் குறித்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் இன்று(16) புதன்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து பிரதேச அரச திணைக்கள அதிகாரிகளுக்கும், கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் விளக்கமளிக்கும் போது இதனை தெரிவித்தார்.

மேலும் குறித்த நிறுவனத்தினால் பிரதேசத்தில் இருக்கின்ற 1500பேருக்கும், 10பாடசாலைகளுக்கும்  குடிநீர் இணைப்பினையும், 20கால்வாய்கள் துப்பரவு செய்வதற்கும், 1500மரங்கள் பிரதேசத்தில் நடுவதற்கும், சுகாதாரமேம்பாடு, திறன் அபிவிருத்தி போன்ற செயலமர்களையும் நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிணறுகள் மூலமாக பாவிக்கப்படும் நீர் குடிநீருக்கு உகந்ததல்ல என்ற ரீதியிலும், வரட்சி, வெள்ளம் போன்ற காலங்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளதன் நிலையினால் குடிநீர் இணைப்புக்களை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வழங்கி வருவதாகவும் கூறினார்.