வரட்சியினால் பட்டிப்பளை பிரதேச கால்நடைகள், விவசாய செய்கை, பாதிப்பு

(படுவான் பாலகன் ) பருவ மழையின்மையால், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குளங்களில் நீர்வற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம், கால்நடைகள், போன்றன பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்கள புளுகுணாவை பிரிவு தொழிநுட்ப உத்தியோகத்தர் தி.மதியழகன் குறிப்பிட்டார்.

பிரதேசத்திற்குட்பட்ட புளுகுணாவை குளத்தில் 10அடி, கங்காணியார் குளத்தில் 1.5அடி, கடுக்காமுனை குளத்தில் 3அடி மட்டங்களில் தற்போது நீர்தேங்கி நிற்பதாகவும், ஏனைய சிறிய குளங்களில் முற்றாக நீர்வற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஏற்பட்டுள்ள வரட்சி நிலை நீடிக்குமாகவிருந்தால் சிறுபோக விவசாயசெய்கை செய்ய முடியாத நிலை ஏற்படும். கால்நடைகளுக்கான நீர்தட்டுப்பாடும் ஏற்படும். மாடுகள் மற்றும் யானைகள் ஏனைய மிருகங்கள் புளுகுணாவை குளங்களில் நீரைபருகிக் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள நீர் மிருகங்களுக்கு சித்திரைமாதம் வரை ஓரளவு போதுமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எனினும் வரட்சி தொடர்ந்தால் உயிரினங்களின் உயிரழிப்பு இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புளுகுணாவை குளத்தில்  ஏழரை இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு அதற்கான அறுவடைகள் ஆரம்பித்துள்ளன. ஆனாலும் அறுவடை முடிவுற்றதும், மீண்டும் மின்குஞ்சுகள் குளத்தில் விடமுடியாத நிலையினால் நேரடியாக 70குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலையேற்படும்.

குளங்களில் இருந்த நீரை தற்போதையை விவசாய செய்கைக்கு பயன்படுத்தியுள்ள நிலையிலும், மேட்டுநில விவசாய செய்கைகள் வெப்பத்தின் காரணமாக கருகி காணப்படுகின்றது. செய்கைப்பண்ணப்பட்டுள்ள விவசாயத்தின் விளைச்சலும் மிகவும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் தற்போது ஏற்பட்டுள்ளது. வரட்சி நீடித்தால் இதன் நிலைமையும் இன்னும் மோசமாகும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.