கோட்டைக்கல்லாறு சேனைத்துறை வீதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள கொள்ளைச் சம்பவம்



( தாஸன்)

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு சேனைத்துறை வீதியில் அமைந்துள்ள யோகராணி நேசதுரை என்பவரின் வீட்டினுள் உட்புகுந்து திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த தினத்தில்(03) குறித்த வீட்டிலுள்ள அனைவரும் ஆலயத்திற்கு அன்னதானம் வழங்க சென்றிருந்த வேளை திட்டமிட்ட வகையில் குறித்த வீட்டினுள் உட்புகுந்து பணம் மற்றும் தங்க நகைககளை களவாடப்பட்டுள்ளதென்றும் அவசர வேலை நிமித்தம் குடும்ப உறுப்பினர் ஒருவர் வீட்டிற்கு திரும்பிய போது திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மிகவும் திட்டமிட்ட வகையில் வெகு சாதுர்யமாக இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென்றும் வீட்டினுள் உள்ளிருந்தே அலுமாரிகள் பல கூரிய ஆயுதங்களினால் உடைக்கப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் பணம் மற்றும் நகைகள் எடுக்கப்பட்டுள்ளதென்றும் சுமார் 8000 ரூபா பெறுமதியான பணமும் 15 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று இரவு(03) மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டதெனவும் அதன் தொடராக இன்றும் அச்செயற்பாடு நடைபெறவுள்ளதெனவும் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி விசேட பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன நடமாட்டம் மிகுந்த பட்டப்பகலில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பிரதேசத்தில் உள்ள பலரின் மத்தியில் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது.