நாளை (30) நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் வழமைபோன்று இயங்கும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!



2026 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை அடுத்த மாதம் 04 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், நாளை (30) ஆரம்பமாகும் இறுதி வாரத்திற்குள் திட்டமிடப்பட்ட அனைத்துக் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் எவ்வித மாற்றங்களோ அல்லது இடையூறுகளோ இன்றி நிறைவு செய்யுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

இன்று (29) ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை (30) சாதாரண பாடசாலை தினமாகக் கருதப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட அனைத்துப் பரீட்சைகளும் ஏனைய பாடசாலைச் செயற்பாடுகளும் வழமை போன்று நடைபெறும்.

சில பாடசாலைகள் ஏற்கனவே ஆண்டிறுதிப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஏனைய பாடசாலைகள் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதால், திட்டமிடப்பட்ட பாடசாலைச் செயற்பாடுகளில் எவ்வித மாற்றங்களோ அல்லது தடங்கல்களோ அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட விசேட சூழ்நிலைகள், குறிப்பாக தித்வா புயல் நிலைமையைத் தொடர்ந்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமையினால் , இந்த ஆண்டுக்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த 197 பாடசாலை நாட்கள் 186 நாட்களாகக் குறைக்கப்பட்டிருந்ததை செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், பாடசாலை நாட்களை மேலும் குறைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.