களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினரின் விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள்.


(துறையூர் தாஸன்)

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் பாரம்பரிய கலாசார உணவுகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு,கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன்,களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.ஜி.சுகுணன்,பிரதேச சபை செயலாளர் குபேரன்  கணக்காளர் கார்த்திகேசு ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாதர் சங்கங்களுக்கிடையிலான பிரதேச செயலக அலுவலர்களுக்கிடையேயான போட்டிகளே இங்கு நடத்தப்பட்டது.

கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் முதனிலை பெற்ற செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகம் இவ்வருவடத்துக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.


இவர்களுக்கான வெற்றிக் கேடயம் உதவி மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் ஊடாக ஒருமித்து வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் திணைக்கள இணைப்பாளர், பிரதேச செயலகங்களின் விளையாட்டு உத்தியோகத்தர்கள்,வலயக் கல்வி அலுவலர்கள்,பிரதேச செயலக திட்டமிடல் அலுவலர்,கலாசார மரபுரிமை உத்தியோகத்தர்,கணக்காளர்,கிராம உத்தியோகத்தர்கள்,ஆலயங்களின் வண்ணக்கர் மற்றும் தலைவர்கள் அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.