திறந்த கல்வி மற்றும் தொலைக்கல்வி ஏற்பாடுகளும் முக்கியத்துவமும்

அறிவற்ற சமூகத்தை கற்ற சமூகமாக மாற்ற கல்வி அவசியமாகும். கல்வி ஊடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்த பல எண்ணக்கருக்கள் உருவாகியுள்ளன. அவற்றுள் திறந்தகல்வி, தொலைக்கல்வி என்பன முக்கியத்துவம் பெறுகின்றது. திறந்தகல்வி என்பது கல்வி பெறும் உரிமையை இழந்தவர்களுக்கு கற்க வழி செய்தலோடு கற்பதற்கு ஏற்பட்ட தடைகளை நீக்கி கற்க உதவுதலாகும். அதாவது உயர் கல்வியை முறைசாராக் கல்வியின் மூலம் அளிப்பதற்கு உருவாக்கப்பட்டதே திறந்த கல்வி முறையாகும்.

கல்வியில் சம வாய்ப்பினை எல்லோருக்கும் வழங்குவது அரசாங்கங்களின் கொள்கையாகவும் நாட்டின் தேவைக்காக மனித வலுவைப் பெற்றுக் கொள்வது அரசாங்கங்களின் நோக்கமாகவும் உள்ளது.

இந் நோக்கின் ஊடாக உருவாக்கப்பட்ட திறந்த கல்வியின் முக்கியங்களாவன:

திறந்த கல்வியினூடாக எல்லா வகைக் கற்றலை மேற்கொண்டவரும் இதில் கற்கமுடியும்.

பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பினைப் பெறமுடியாதவர்களுக்கு உயர் கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பாக  உள்ளது.

தொடர்ச்சியாக பாடசாலைக் கற்கை நெறியைப் பகுப்பாய்வு செய்வதோடு எதிர்பார்த்த நோக்கத்தை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்வதாகவும் உள்ளது.

அனுமதியில் எந்த வயதினரும் எந்த திறனை, தகைமையினை உடையவரும் கற்கலாம்.
திறந்த கல்வியின் அடிப்படைப் பண்புகளாவன:

நெகிழ்ச்சித் தன்மை அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது வயது, கல்வித்தகைமை என்பன உயர் கல்வியினை பெறுவதற்கு வரையறை இல்லை.

கட்டுப்பாடுகளும் இல்லை. ஏனெனின் விரிவுரைகளுக்கு வருகை தர வேண்டும், முழு நேரமும் கற்றலில் ஈடுபடவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.

தொழிலை மேற்கொண்டே கல்வியினை நூல்கள் சாதனங்களினூடாக பெறமுடியும்.
திறந்தகல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. அவையாவன:

கற்றலுக்கான சாதனங்கள் குறைவாகக் காணப்படுகின்றது.

வறுமையின் காரணமாக நடுத்தர வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான நவீன தொழிநுட்ப செவிப்புல, கட்புல சாதனங்களை பெறுவது கடினமாக உள்ளது.

தொழிலை மேற்கொண்டு  அதனோடு கற்றலை மேற்கொள்வதும் கடினமாக உள்ளது. ஏனெனில் தொழில், வீட்டுவேலை என்பவற்றை மேற்கொண்டு கற்றலிலும் ஈடுபடுவதற்கு நேரம் போதாமை காணப்படுகின்றது.

அடுத்ததாக தொலைக் கல்வி என்றால் என்ன என்பதனை எடுத்து நோக்கினால் தொலைவிலிருந்து கற்றல் எனப்படும். கற்பவரும் கற்பிப்பவரும் நேருக்கு நேர் தொடர்ச்சியாகச் சந்திக்காமல் எழுத்து மூல, இலத்திரனியல் ஆவணங்களின் உதவியுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் தொலைக்கல்வி எனப்படும். இலங்கையில் திறந்த பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம், ஆசிரியர் பயிற்சி கலாசாலை போன்றவற்றினூடாக தொலைக் கல்வியைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

தொலைக்கல்வியைப் பெறும் மாணவர்களின் வகைப்பாட்டினை எடுத்து நோக்கினால் தொலைக் கல்வியினூடாக தொழிலைப் பெறுவோர், தற்போது தொழிலில் உள்ளோர் அதனோடு தொடர்பான கல்வியை பெற்றுக் கொள்வதனால் அறிவை கூட்டிக் கொள்வோர், பதவி உயர்வு, தற்போது செய்யும் தொழிலை விட சிறந்த தொழிலை பெற விரும்புவோர் ஆகியோரைக் குறிப்பிடமுடியும். தொலைக்கல்வியின் முக்கியத்துவங்களாக உயர் கல்வியினைக் கற்பதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது, ஆசிரியர் பணி மேற்கொள்பவர்களுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் மனித வலுப் பயிற்சியையும் தர உயர்ச்சியைப் பெறுவதற்கும் உதவுகின்றது.

தொலைக்கல்வியானது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. ஆசிரியரும் மாணவரும் தொலைவில் காணப்படுதல், மாணவர்கள் சுயகற்றலுக்குரிய சந்தர்ப்பம் அதிகம் காணப்படும், தொழில் புரியும் போது கல்வியைப் பெறமுடியும், பௌதீக வளங்கள் தொடர்பான பிரச்சினைகள், தேவைகள் குறைவாகவும், சேவை நிலையத்தில் நிலவும் மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினை குறைவாகவும், கல்விக்கான செலவு குறைவாகவும், வயது, அடிப்படைத் தகுதி இல்லாதவர்களும் கற்க கூடியதாகவும், அதிக மாணவர்கள் ஒரே நேரம் கற்கக் கூடியாதகவும், இடைவிலகல் குறைவாகவும் காணப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் கல்வியைப் பெறுவதன் ஊடாகவே சமூகத்தில் வாழமுடியும் என்ற நிலை காணப்படுகின்றது. எனவே திறந்தகல்வி, தொலைக்கல்வி என்பன உயர் கல்வியைப் பெறமுடியாதவர்கள் அதனைப் பெற்றுக் கொள்ளவும் உயர் கல்வியைப் பெற்றவர்கள் மேலும் தங்களுடைய தகைமைகளை அதிகரித்துக் கொள்ளவும் உதவுவதாகக் காணப்படுகின்றது எனலாம். இவ் விடயங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பாடசாலைக்கல்வியை நிறைவு செய்ததும் பல்கலைக்கழகத்திற்கு நுழைய முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் கல்வியை நிறைவு செய்து கொண்டு வாழ்க்கையை தொலைக்கின்றனர்.

அவ்வாறான மாணவர்கள் இவ் விடயங்களை தெரிந்து கொள்வதன் ஊடாக தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு கற்றலையும் மேற்கொள்ள முடியும். மேலும் இன்றைய கால கட்டத்தில் ஒரு தொழில் கிடைத்தால் போதும் என்ற நிலை காணப்படுகிறது. இதனால் தங்களுடைய தொழிலில் வாண்மை அற்றவர்களாக காணப்படுகின்றனர். மேலும் வாண்மையை அதிகரிக்க விரும்புவோர் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான வழி தெரியாதவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறானோர்  இலங்கையில் காணப்படும் திறந்த கல்வி, தொலைக்கல்வி நிறுவனங்களினூடாக வாண்மையை அதிகரித்துக் கொள்ள முடியும்.

தர்ஷனா. தேவராஜன்
உதவி விரிவுரையாளர்,
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.