இலங்கையில் சுற்றுலாத்துறை எதிர்நோக்கவிருக்கும் சவால்!



கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த பத்தாண்டுகளில் இப்படி ஒரு சூழலை இலங்கை எதிர்கொள்ளவில்லை. எங்கு பார்த்தாலும் பதற்றம், பத்துக்கும் மேற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு, கலக்கத்தில் நாடு, நிம்மதியைத் தொலைத்த மக்கள். இதுதான் இன்றைய இலங்கையின் நிலை.

2009-ம் ஆண்டு போர் முடிவுக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சற்று சீரடைந்திருந்தது. அதன் பிறகு அங்கு நிலவிய அரசியல் சூழல் மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாகப் பொருளாதார வளர்ச்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய துறைகளாக சுற்றுலாத்துறை, விவசாயம், தேயிலை மற்றும் ஆடைகள் ஏற்றுமதி போன்றன உள்ளன.

2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை சுமார் 9.8 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இலங்கைக்குக் கிடைத்த வருவாய் 1547.807 மில்லியன் அமெரிக்க ​டொலர்.

உள்நாட்டு உற்பத்தியின் அளவு சற்று ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தாலும், அந்த வருமானத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது சுற்றுலாத் துறைதான்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இலங்கையின் சுற்றுலாத் துறையில் தற்காலிகப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்றும், நீண்ட கால பாதிப்புகள் எதுவும் இருக்காது என்றும் நாட்டின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களிலும் எந்த ஒரு நிரந்தர பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறை பாதிப்பு குறித்து, இலங்கையில் உள்ள 'ஹேலியஸ்' தனியார் சுற்றுலா நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறும் போது "இலங்கையின் அதிக வருவாய் வரும் துறைகளில், சுற்றுலாத்துறை மிக முக்கியமான ஒன்று. எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான சுற்றுலா நிறுவனங்கள் இங்கு உள்ளன.

சுற்றுலாதான் எங்கள் அனைவரின் பிரதான தொழில். 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி சற்று ஏறுமுகமாகவே இருந்தது.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம், எங்கள் தொழிலில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை சீரடைவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்.

வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்தாலும் ஏப்ரல், மே மாதங்களில்தான் இலங்கைக்கு அதிகமானோர் வருகை புரிவர். இந்தச் சம்பவத்தால் ஏற்கனவே முன்பதிவு செய்த பலரும் தங்களின் வருகையை ரத்து செய்திருக்கின்றனர்.

இங்கு வந்தவர்கள் பலரும் அவர்கள் நாட்டுக்கு திரும்பி விட்டனர். நாங்கள் எங்கள் நாட்டை விட்டு எங்கு செல்வது? இந்தப் பதற்றம் என்று குறையும், எங்களின் வாழ்க்கை என்று இயல்புநிலைக்குத் திரும்பும்? இழந்த உயிர்களுக்குப் பதில் சொல்லப்போவது யார்?"