தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசிற்கு உதவிய சர்வதேச சமூகம் அழிப்பின் பின் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பித்துக் கொள்ள இடமளிக்கப்படாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இரா. சம்பந்தன் தமிழரசுக் கட்சி மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற தமிழரசு கட்சியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வட கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கான தீர்வு பல தடைகளை கடந்தும், பிரச்சினைகளை எதிர்நோக்கியும் இவ்வருட இறுதிக்குள் கிடைப்பதற்காக எமது கடும் முயற்சி தொடரும் எனவும் பல அரசியல் கட்சிகள் எம்மை விமர்சிப்பதையே அவர்களின் கட்சிக் கொள்கைகளாக கொண்டு செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் கோரும் அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் உலக நாடுகளில் அமுல்படுத்தப்படும் சுயாட்சி, அதனோடு கிடைக்கும் அதிகாரங்கள் எமது மக்களுக்கும் கிடைக்கும் வரைக்கும் அதற்கு அழுத்தங்களை பிரயோகிப்போம். எமது கடைமையில் இருந்து வழிமாறிப்போவதற்கு பல வழிகளில் எம்மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது நாங்கள் வழிமாறி பயணிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
எமது வரலாற்றின் அடிப்படையில் எமது கலாச்சாரம் பண்பாட்டின் அடிப்படையில் சுயமரியாதையுடன் சுயகொளரவத்துடன் எமது உரிமைகளை பெற்று சுயாட்சியுடன் வாழ்வது எமது பிறப்புரிமை அதை அவர்கள் மறுக்க முடியாது. இதை அடைவதற்கு முக்கியமான விடயம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இதே ஒற்றுமையே எமது பலம். காணிப் பிரச்சினையைப் பொருத்தவரையில் பல பிரதேசங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது சில பிரதேசங்கள், விடுவிக்கப்படவில்லை. அவையும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு சம்பூரில் மக்களின் காணிகளை அபகரித்து விட்டு காணி சொந்தக்காரர்களுக்கு 20 பேச் காணிகள் கொடுப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. இதை பாராளுமன்றத்தில் நான் கதைத்த போது பசில் ராஜபக்ஷ, சம்பூரில் அனல் மின்நிலைய காணி தவிர மற்ற அனைத்தும் மக்களுக்கு வழங்கப்படும் என்றார். ஆனால் அவர் அதனை நிறைவேற்றவில்லை. இது பாராளுமன்ற பதிவில் இருக்கின்றது. ஆனால் அவர்கள் அனைத்துக் காணிகளையும் வர்த்தமானி மூலம் தனியார் நிருவனத்திற்கு வழங்கினார்கள்.
அதை நாங்கள் தடுத்து நிறுத்தி காணி உரிமையாளர்களுக்கு வழங்கினோம் என்றார். மேலும் அவர் உரையாற்றுகையில், ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரையில் கட்சிகள் அது சம்பந்தமாக முடிவுகள் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் கட்சிகளின் முடிவுகளின் அடிப்படையில் கட்சி வேட்பாளர்களின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை அறிப்போம் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.






.jpg)







.jpg)