2ம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்
இலத்திரணியலோடு இயங்கிக்கொண்டிருக்கின்ற இருபத்தியோராம் நூற்றாண்டிலே கல்வி என்ற ஓர் பதத்தை அறியாத மானிடர் இல்லை. கல்வி என்பதற்கான வரைவிலக்கணத்தை நாம் ஒரு போதும் வரையறை செய்யப்போவதில்லை. கல்வி என்றால் அறியாமையை போக்குதல் என்பார்கள், வாழ்வியலை புரிந்துகொள்ளல் என்பார்கள். எண்ணும் எழுத்தும் கல்வி என்பார்கள் ஆனால் கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு திறமை சிந்தனை செயல் போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பண்பாடு நடத்தை போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடையசெய்வதே கல்வி.
இக் கல்வியை கற்பதற்கான காலம் வரையறுக்க முடியாதது இதைதான் பழந்தமிழ் பெண்புலவர் ஒளவையார் கூறியுள்ளார் 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்று அதாவது எத்தகைய புலமை படைத்தோனும் தான் அறிந்தவற்றை ஆராய்ந்து பார்த்தால் தான் கற்கவேண்டியது உலகத்திற்கு ஒப்பாகவும் கற்றறிந்தது கையளவும் ஆகத்தான் இருக்கும்.எனவே ஒரு மனிதன் இப் பிரபஞ்சத்திலே பிறந்த நாள் முதல் அவனது உயிர் உடலை விட்டு பிரியும் வரை அவன் கற்றுக்கொண்டே இருக்க
வேண்டும். இதுவே வாழ் நாள் நீடித்த கல்வி எனப்படுகின்றது. இதனை பௌத்த தத்துவமான Yava nibban (பரிநிர்வாண நிலையை அடையும் வரை) கற்க வேண்டும் என்றும் 1970 இல் Nallthaleem கொள்கை ஒருவன் தனது வாழ்க்கை காலம் முழுவதும் கற்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றன.
வாழ் நாள் நீடித்த கல்வி என்பது ஒருவரது வாழ்நாளில் இளங்கால பருவத்தில் ஒரு சில வருடங்கள் மட்டும் கற்கும் செயற்பாடு ஒன்றன்று. சமூகத்தின் நிலைமைகள் மாற்றம் பெறுவது தொடர்ச்சியாக நிகழ்வதாகும். இதன் விளைவாக புதிய புதிய சவால்களும் பல வகையான தேவைகளும் எழுகின்றன.
அதிகரித்து வரும் தொழிநுட்ப வளர்ச்சி, புதிய தொழில்களுக்கான புதிய திறன்கள் தேவைப்படுதல், இன்றைய சமூகவாழ்வில் சிக்கல் மிகுந்த பிரச்சினைகள் காணப்படல், போட்டிச்சூழலிலே அனைவரும் கற்றல் அறிவை கொண்டிருப்பதால் தனித்துவமான ஓர் இடத்தை பெற்றுக்கொள்ளுதல் என்பது நபர்களிடையே போட்டியை ஏற்படுத்தல் போன்றனவும் இணைந்து கல்வி
வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் ஒன்றாக அதனை மாற்றி உள்ளனர். வாழ்நாள் முழுவதும் கற்றல் தனி மனிதனுக்கும் அவன் வாழும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு விடயமாகும்.
கல்வியல் தத்துவங்களிலே ரூசோ குறிப்பிட்டிருக்கிறார் மனித வாழ்க்கைக்கு பிரதானமானது கல்வி என்றும் கல்வியை வாழ்வதற்காக கற்க கூடாது வாழ்க்கையை வாழுவது தான் கல்வி என்றார். ஒரு குழந்தை மண்ணில் பிறந்தவுடன் சுவாசிக்கின்றது. அங்கே அக்குழந்தைக்கு சுவாசிக்க
கற்றுக்கொடுக்கப்படுவதில்லை, குழந்தை தான் அறிந்துகொள்கிறது நான் இப்புவியில் நிலைத்திருக்க வேண்டுமெனில் சுவாசிக்க வேண்டும் ஆகவே நான் சுவாசிக்க கற்றுகொள்ள வேண்டும் என்பதை.
அதே போன்று ரூசோ குறிப்பிட்டிருக்கிறார் பிள்ளைகளை இயற்கையின் போக்கில் வாழ அனுமதியுங்கள் என்று அப்பொழுது தான் பிள்ளைகள் அனுபவ கல்வியை கற்றுகொள்கிறார்கள். ஏட்டுக்கல்வியோ நினைவாற்றலோ வாழும் வரை நமக்கு உதவுவதில்லை அனுபவக்கல்வி தான் வாழ்க்கைக்கு உகந்ததாகின்றது.
இன்றைய காலத்திலே போட்டி உலகிலே வேலைவாய்ப்புக்களை பெற்றுகொள்ளுவதற்கான பரீட்சைக்கான கல்வி தான் கல்வி என்று நாம் எண்ணி கொண்டிருக்கின்றோம் ஆனால் ஒருவன் பிறந்ததில் இருந்து பேசக்கற்றுகொள்கிறான், உண்ண கற்றுகொள்கிறான், பிறரை மதிக்க
கற்றுகொள்கிறான், உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுகொள்கிறான். வளரத்தொடங்கியதும் தனது கற்றல் முறமைகளை பின்பற்றுவதற்காக பாடசாலைகளை நாடுகின்றான்.
பின்னர் உயர்கல்விக்காக நம் நாட்டிலிருந்து குறித்த மாணவர்களே அனுமதிக்கபடுகின்றார்கள் ஏனையவர்கள் தமது கற்றலை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. உயர் கல்வியை தொடர்பவர்கள் ஒருபுறமும் ஏனையவர்கள் தமது தொழிலுக்கான கல்வியை தேட தொடங்குகின்றார்கள் .
தொழில் வாய்ப்பை பெற்ற பின்னரும் கற்றல் செயற்பாடு முடிவுறுவதில்லை. ஆசிரியத் தொழிலை தேர்ந்தெடுத்தவர் எதிர்கால புத்திஜீவிகளை உருவாக்க தான் புதியவற்றை கற்கத்தொடங்குகிறார்,
வைத்தியத் துறையிலுள்ளவர் தனது காலமாற்றத்திற்கேற்ப உருவாகும் நோய்களை தீர்பதற்காக புதியவற்றை அறிய தொடங்குகின்றனர் இவ்வாறே தொழில் விருத்திக்காக ஒவ்வொரு துறையினரும் கற்றுகொண்டே இருக்கிறார்கள். கல்வியை அறிந்தவர்கள் மட்டுமல்ல பாமரர்கள் கூட பிறந்ததில் இருந்து இறக்கும் வரை கற்றுகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு பிரச்சினைகளும் நமக்கு ஒர் பாடத்தை கற்பித்து விட்டுதான் செல்கின்றன ஒவ்வொரு மானிடனும் தான் அனுபவிக்கும் குழப்பங்களில் இருந்து தெளிவுகளையும் தெளிவுகளில் இருந்து தீர்மானங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறான்.
நாம் வாழும் வரை கற்றுக்கொண்டிருக்க வேண்டும் வாழ்க்கையை வாழுவதற்காக அதேபோல் வாழும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை கற்றுகொண்டிருக்கிறோம் இது ஒருபோதும் மாறிடப் போவதில்லை......
ஆனால் சமூக வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் மனநிலைகளும் செயற்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருந்தாலும் வாழ்நாள் நீடித்த கல்வியை தம்மை அறியாமல் நுகர்ந்து கொண்டிருப்போரே அதிகம். தம் வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டும் புதிய விடயங்களை அறியவேண்டும் என்றெண்ணி
கற்றல் பழக்கத்தை தொடர்பவர்கள் குறைவாகக் காணப்படுகின்றனர்.
வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றலின் நன்மைகளையும் அதன் மூலமான சமூகத்தின் விளைவுகளையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியதும் ஏனையவர்களுக்கு புரிய வைத்துக்கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு கற்றலார்வம் உள்ளவர்களினதும் கடப்பாடாகும். அந்தவகையிலே வாழ் நாள் முழுவதும் ஒவ்வொருவரும் முறையான ரீதியில் கற்றலை தொடர்வதன் நன்மைகளை எடுத்து நோக்குவோமானால் ஒருவன் வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபடுகின்ற போது அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது போன்றவற்றில் சிறந்த தீர்மானங்களையும் சரியான நடமுறைகளையும் பின்பற்ற முடியும்.
மற்றும் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க முடிவதோடு; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும்
உதவுவதன் மூலம் சிறந்த ஓர் சமுதாய கட்டமைப்பு உருவாகின்றது. மேலும் வாழ்நாள் நீடித்த கற்றலில் ஈடுபடுகின்ற ஒருவனிடம் தேடல் என்பது தீவிரமான ஓர் முயற்சியாக இருப்பதோடு அவனுடைய சிந்தனைகள் படிப்படியாக விரிவாக்கம் அடைந்து புத்துருவாக்க முயற்சிகளில் ஈடுபடத்
தொடங்குகின்றான் இச்செயற்பாடு சமூகத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை தேடித்தருகின்ற செயற்பாடாக அமைகின்றது.
இன்றைய காலகட்டத்திலே பாடசாலை கல்வி மற்றும் உயர்கல்வியையே மாணவர்கள் பெரும் சுமையாக கருதுகின்றனர் இதனால் வாழ் நாள் நீடித்த கல்வி என்பது தற்காலத்தில் ஊக்குவிக்கபட வேண்டியதும் கட்டாயப்படுத்தபட வேண்டியதும் ஒன்றாகும் .அபிவிருத்தியடைந்த மற்றும்
அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் கடந்த இரு தசாப்தங்களாக வாழ்நாள் நீடித்த கல்வி தொடர்பன கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் உருவாக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
வாழ்நாள் நீடித்த கல்வி என்பது பரந்த ஓர் எண்ணக்கருவாக காணப்படுகின்றது. ஒருவன் வாழ்க்கைகாலம் முழுவதும் கற்கவேண்டும், நாட்டிலுள்ள அனைவரும் கற்கவேண்டும், பாடசாலைகளில் மட்டும் அன்றி கற்றல் தொடர்பான அனைத்து நிலையங்களும் ஊக்குவிக்கப்படவேண்டும் என பரந்த பரப்புக்களை இது உள்ளடக்கியள்ளது . அந்தவகையிலே ஒருவன் வாழ்நாள் முழுவதும் கற்றலை தொடர்வதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எடுத்து நோக்குவோமானால் தற்கால கற்றல் செயற்பாடுகள் நடைமுறை
வாழ்க்கையோடும் தொழில்வாய்ப்போடும் நெருங்கிய தொடர்பினை கொண்டிராமல் பாடப்பரப்புகளையும் விளக்கங்களையும் திணிக்கப்படுவதாகவும் போட்டியை எதிர்கொள்வதற்கும் தெரிவினை மட்டுப்படுத்துவதற்காகவும் பரீட்சைகளை மையமாக கொண்ட கல்வி முறைமை காணப்படுவதாலும் மாணவர்கள் மனநிறைவோடும் விருப்பத்தோடும் கல்வியை தொடர மறுக்கின்றனர் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்சியாலும் தொழில்வாய்பு போட்டியாலும் விரைவாக தொழிலை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர் தொழிலை தொடர்ந்தவுடன் வேலைப்பழு காரணமாக கற்றலைத் தொடர்வதில்லை.
சமூக மாற்றத்தின் விளைவாக பணத்தோடும் நவநாகரீகத்தோடும் மக்கள்
ஒன்றித்திருப்பதனால் வருமான உழைப்பதனையே வாழ்கையாக்கி கொண்டிருக்கிறார்கள் மற்றும் குடும்ப சுமை வருமானத்தைக் கருத்திற்கொண்டு வேற்றுநாடுகளில் கீழ் உழைப்பில் ஈடுபடச்செல்லல்
போன்றவற்றின் விளைவாகவும் வாழ்நாள் நீடித்த கல்வியானது பூரணப்படுத்தபடாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்திலே அதிகரித்து வருகின்ற சமூகவியல் குற்றங்கள் கூட வாழ்நாள் நீடித்த கல்வியை செயற்படுத்துவதன் மூலம் கட்டுபடுத்த கூடிய ஒன்றாகவே காணப்படுகின்றது . நாம் வாழ்நாள் நீடித்த கல்வியை ஒவ்வருவரிடமும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எடுத்து நோக்குவோமானால்ஒவ்வொரு தனிநபரின் திறன்களும் அறிவாற்றாலும் வேறுபட்டாதாகவே காணப்படுகின்றது.
குழந்தைப்பருவத்தில் இருந்தே அவர்களுடைய திறன்களை கண்டறிந்து அத் திறனை ஊக்குவிப்பதோடு அவர்களுக்கான துறைகளை தேர்ந்தெடுத்து அத்துறைகளிலே மிக உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி பயணிக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் உந்துசக்திகளாக இருக்கவேண்டும் இதனால் அவர்கள் தமது உயரிய இலக்குகளை அடையும் வரை கற்றுக்கொண்டே இருப்பார்கள் அடைந்த பின்பும் அடுத்த இலக்கை தாமே நிர்ணயித்து தமது திறமைகளோடு தாம் போட்டியிடத் தொடங்கி இறப்பு வரை கற்றுகொண்டே இருப்பார்கள்.
மற்றும் அரசாங்கம், பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், உயர்கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் போன்றவற்றின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதோடு நவீனமயப்படுத்தல் வசதிகளையும் ஆர்வமான கற்றல் செயற்பாட்டிற்குத் தகுந்த சூழலையும் பெற்றுத்தர வேண்டும் மற்றும் பட்டங்களிற்கும் தகுதிகளிற்கும் ஏற்ப முறையாக வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு வேலைநேரங்களை மட்டுப்படுத்தி வேலைத்தளங்களிலும் மேலதிக கல்வியையும் திறனையும் வளர்த்துக்கொள்வதற்கான சந்தர்பங்களை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும்.
பிரதேசவாரியாக நூல்நிலையங்களையும் கலைக்கூடங்களையும் நிறுவுவதோடு தொழில்நுட்பம், விஞ்ஞானம், கலை, இலக்கியம், அரசியல் என அனைத்து துறைரீதியாகவும் ஊக்கப்படுத்தல்களை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலமாக சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் கற்றலை விரும்புவதோடு வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட்டு சிறந்த ஓர் சமுதாயத்தை கட்டியெழுப்ப பெருந்தூண்களாய் திகழ்வார்கள்.
'வாழ்க்கை முழுவதும் கல் வாழ்க்கையை முழுவதுமாய் கல்'







.jpg)




.jpeg)
