கல்முனையில் சிறுமி வேனில் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் – 25 வயது இளைஞன் கைது


(பாறுக் ஷிஹான்)


கல்முனை பகுதியில் முகவரி கேட்பது போல் நடித்து, 16 வயதுச் சிறுமி ஒருவரை வாயைப் பொத்தி வேனில் கடத்திச் சென்று கூட்டுத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பால் மறுநாள் வியாழக்கிழமை (04) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு பிரதான சந்தேகநபரான 25 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (05) கல்முனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமி (பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்) தனது தாயாருடன் ஆடை கொள்வனவிற்காகச் சென்றுள்ளார். இதன்போது அங்கு பணியாற்றிய குறித்த இளைஞனுடன் காதல் தொடர்பு ஏற்பட்டு, தொலைபேசி எண்களும் பரிமாறப்பட்டுள்ளன.

அதன் பின்னர், இருவரும் கடந்த இரண்டு மாதங்களாகத் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தொடர்பிலிருந்துள்ளனர். இவ்வாறான பின்னணியில், புதன்கிழமை 11:30 மணியளவில், வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றில் தான் பணியாற்றும் ஆடை விற்பனை நிலையத்தின் மற்றுமொரு ஊழியரான 56 வயதுடைய நபரையும் சாரதியாக அழைத்துக் கொண்டு இவ்விளைஞன் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், வீட்டில் சிறுமி தனியாக இருந்த சமயம் அவருக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்த இளைஞன், முகவரி ஒன்றைக் காட்டுமாறு கோரியுள்ளார். அதனை நம்பி வீட்டிலிருந்து வீதிக்கு வந்த சிறுமியின் வாயைப் பலவந்தமாகப் பொத்தி, கடத்திச் சென்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் பகுதிக்குக் கடத்திச் செல்லப்பட்ட அச்சிறுமி, அங்குள்ள பாழடைந்த வர்த்தகக் கட்டிடம் ஒன்றினுள் வைத்து முதலில் குறித்த இளைஞனாலும், பின்னர் 56 வயதுடைய மற்றைய சந்தேகநபரான சாரதியினாலும் கூட்டுத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின்னர் அச்சிறுமியை அக்கரைப்பற்று பகுதியில் இறக்கிவிட்டு இரு சந்தேகநபர்களும் தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியால் வந்த பேருந்து ஒன்றின் உதவியுடன் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தை அடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே விவரித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு 25 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் கல்முனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தினால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சி காரணமாகச் சிறுமியின் தாயாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய, தற்போது தலைமறைவாகியுள்ள 56 வயதுடைய மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகக் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.