மட்டக்களப்பில் போலி நகை மோசடி - 9 மாதங்களின் பின் கணவன் கைது - உபகரணங்கள் மீட்பு!


மட்டக்களப்பு பகுதியில் போலி தங்க ஆபரணங்களைத் தயாரித்து, அவற்றை அசல் தங்க நகைகள் என வங்கியில் அடகு வைத்துப் பண மோசடியில் ஈடுபட்டு, கடந்த 9 மாதங்களாகத் தலைமறைவாகி வந்த நபர் ஒருவர் நேற்று (04) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், கடந்த வருட ஆகஸ்ட் மாதம் பெண் ஒருவர் போலி தங்க ஆபரணங்களை அடகு வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அந்த நகைகள் போலியானவை என வங்கி அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.

இது குறித்துப் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நகைகளை அடகு வைத்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணைப் பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணவரே இந்த போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்துத் தந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமானது.

இதனையடுத்து, குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, இக்குற்றச்சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான, போலி நகைகளை வடிவமைத்த கணவன் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

சுமார் 9 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த சந்தேகநபர், மதுபானக் கடை ஒன்றில் மது அருந்திக்கொண்டிருப்பதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் ஆலோசனைக்கு இணங்க, பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த மதுபானக் கடையை முற்றுகையிட்டுச் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரரிடமிருந்து போலி தங்க ஆபரணங்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல நவீன உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.