திகாமடுல்ல தேர்தல் களம் 2020: பாராளுமன்ற இருப்புகளை இழக்க உள்ள முஸ்லீம் சமூகமும்; இருப்பே கேள்வி குறியாகியுள்ள தமிழ் சமூகமும்!

திகாமடுல்ல மாவட்டத்தில்  2020 க்கான பாராளுமன்ற தேர்தல் பல புதிர்களை படைக்க கூடிய வகையில் அமைய போகும் என்பதில் எதுவித ஐயப்பாடும் காணப்படாது என்பது திண்ணமே என கருத்து தெரிவித்து உள்ளார் திகாமடுல்ல மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் Dr இரா. சயனொளிபவன்.

இம்முறை தேர்தலிலே பல தேசிய மற்றும் பேரினவாத கட்சிகளும், அத்தோடு எண்ணிலடங்கா வேட்ப்பாளர்களும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் குறித்த 7 பாராளுமன்ற ஆசனத்திற்காக கடுமையான போட்டியில் தங்களது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனில் ஆசனத்தை கைப்பற்ற கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் என்ற வகையில் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ரணில் விக்ரம்சிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, சம்மந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது. இதற்கு அடுத்த படியாக ரிஷாட் பதியுதீன் தலைமையிலான தேசிய மக்கள் காங்கிரஸ் பேசப்படும் ஒரு கட் சியாக காணப்படுகிறது.

அண்ணளவாக 189,000 வாக்குகள் அளிக்கப்பட கூடிய சிங்கள வாக்குகளாக அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாண்மை சிங்கள சமூகமானது ஒரே குடையின் கீழ் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோட்டாபய ராஜபக் ஷ தலைமையின் கீழ் அணிதிரண்டு உள்ளது என்பது உண்மை. இதனடிப்படையில் நிச்சயமாக 70% வாக்குகள் மொட்டு கட்சிக்கு அளிக்கப்படுவது உறுதியாகும். மேலும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இடையேயும் கணிசளவிலான வாக்குகள் பறிக்கப்படுவதனால் நிச்சயமாக 3 ஆசனங்கள் அவர்களால் தட்டி செல்ல முடியும்.


அடுத்ததாக பல்வேறு பட்ட விமர்சனங்கள், பலவீனங்கள் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியும் ஓரளவுக்கு வாக்குகளை திரட்டி ஒரு சிங்கள பிரதிநித்துவ ஆசனத்தை தட்டி செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது . குறிப்பாக இக் கட்சியிலே போட்டியிடும் தயா கமகே இன் பாரியார் அனோமா கமகே கடந்த காலங்களில் விவசாய மற்றும் நீர்வள அபிவிருத்தி, பெற்றோலிய மற்றும் கனியவள பிரதி அமைச்சராக பதவி வகித்தவர் மேலும் தயாகமமே கடந்த தேர்தலில் 70,000க்கு மேற்பட்ட வாக்குகள் போட்டவர்  என்பதனாலும்  தனிப்பட்ட கணிசமான வாக்கு வங்கியினை கொண்டுள்ளதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

முஸ்லீம் சமூகத்தை பொறுத்த வரையில் அம்பாறை மாவட்டத்தில் பெரும் பான்மை மக்களாகவும், அண்ணளவாக 230,000 வாக்குகளை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர், எனினும் இந்த அனைத்து வாக்குகளும் பிரதானமாக நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது. அந்தவகையில் சஜித் அணியுடன் இணைந்துள்ள முஸ்லீம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் பொதுஜனபெரமுன என்பன இதனுள் பிரதானமாக உள்ளடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரதானமாக முஸ்லிம் காங்கிரஸ் சஜித் கூட்டணியில் இணைந்து செயற்படுவது ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில் ஒரு பலம் என்றே கூறவேண்டும். மேலும் குறிப்பாக 3 முன்னால் முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நியமன உறுப்பினர் இக் கடைசியில் களமிறங்குவது அதிகப்படியான முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்கு சாதகமான ஒன்றாகும். இதனடிப்படையில் இந்த குறிப்பிடபட்ட கூட்டணி 2 ஆசனங்களை பெற்று கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளன.

மேலும், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் முன்னாள் துணைவேந்தர் இஸ்மாயில் மற்றும் சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை உத்தோயோகஸ்தர் சலீம் இணைந்துள்ளதன் காரணமாக கணிசமான வாக்குகள் இக் கட்சி பெற்று கொள்ளும் என்பதும் சாத்தியப்பாடான ஒன்றாகும். அதேபோன்று றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட் சியில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் மற்றும் பிரபல வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் முஷாரப் முது நபின் அவர்களும் களம் இறங்கி உள்ளதால் கணிசமான வாக்குகள் இவர்களும் பெற்று கொள்வார்கள் என்பதில் மாற்று கருத்து காணப்படாது. மேலும் கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் றிசாட் தலைமையிலான கட்சி 34,000 வாக்குகள் பெற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனையில் தனிப்பட்ட வாக்கு வங்கியினை கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தப்பாவின் மகன் ரிஸ்வி முஸ்தப்பா சாய்ந்தமருதில் போட்டியிடுவதனால் முஸ்லீம் மக்களின் வாக்குகளும் பல திசைகளில் பிரிந்து செல்ல போகின்றது என்பது தெள்ள தெளிவாகின்றது.

இதனடிப்படையில் நான்கு ஆசனங்கள் சிங்கள மக்கள் இடையேயும், இரண்டு ஆசனங்கள் முஸ்லீம் மக்கள் இடையேயும் உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் ஒரு ஆசனம் யாருக்கு கிடைக்க போகின்றது என்பதே தற்பொழுது எழுந்துள்ள கேள்வியாகும். பெரும்பாலும் இந்த ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள போவது அதாவுல்லாவா இல்லை தமிழ் மக்களா என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.


தற்பொழுது அம்பாறை மாவட்ட தமிழர்களின் அளிக்கப்படக்கூடிய வாக்குகளாக அண்ணளவாக 95,000 வாக்குகள் கனிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் மற்றும் எமது தமிழ் பிரநிதித்துத்வத்தை இழக்க செய்வதற்காக பல தேசிய கட்சிகழும் பல சுயேட்சை குழுக்களும் இத்தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளனர்

கட்சி பேதங்கள் , தனிப்பட்ட வெற்றி தோல்விகளுக்கப்பால் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தியே ஆக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் நாம் இன்று பயணிக்கின்றோம். பெரும்பாலான வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் களமிறக்கியுள்ளனர். இதனை நாம் நன்கு உணராவிடின் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி வலையிலே சிக்கி அரசியல் அநாதையாகிவிடுவது மாத்திரமன்றி பிற சமூகத்திடம் கையேந்தி நிற்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு அம்பாறை தமிழர்கள் நாம் புறந்தள்ளப்படுவோம்.

மேலும் 37% உள்ள சிங்கள மக்கள் 4 ஆசனங்களையும், 45% உள்ள முஸ்லீம் மக்கள் 2 ஆசனங்களையும் பெறவுள்ள நிலையில் 18% உள்ள தமிழர் நாம் ஒரு ஆசனத்தை தக்க வைத்து கொள்வதற்கு பலத்த போட்டியினை முகம் கொள்ள வேண்டி நேரிட உள்ளது. ஆகவே, இது காலத்தின் கட்டாயம்; நாம் அனைவரும் ஒருமித்து தமிழ் தேசிய கட்சியை பலப்படுத்தி வாக்களிப்பதன் மூலம் எமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதுடன் அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பை அழிக்க என்னும் அந்நிய சக்திகளுக்கெதிராக முன்னோக்கிச் செல்லலாம். இந்த கோட்ப்பாட்டில் இருந்து சற்று தளர்வடைவோமானால் எமக்கனான அரசியல் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு அரசியல் அனாதை ஆகிவிடுவது மட்டுமின்றி, அந்நிய சமூகத்திடம் அரசியல் ரீதியில் அடிமை ஆகிவிடுவோம் என்று Dr இரா.சயனொளிபவன் கருத்து தெரிவித்தார்.

இதனடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடான தன்னுடைய அரசியல் பிரவேசமானது குறிப்பாக புதிய தலைமுறைக்கு ஏற்றாற்போலும், தமிழ் மக்களின் அபிலாசைகளுடன் என்றும் இணைந்து பயணிக்கும் விதமாகவும் எனது அரசியல் கொள்கையானது "உறுதியான தமித்தேசிய வழியில் இணைந்த அபிவிருத்தி" என்ற வகையில் அமையப்பெற்றுள்ளது.

மக்கள் எதனை அவசிய தேவை என கருதுகிறார்களோ அதுவே அரசியல் இலக்காக அமைய வேண்டும்; மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி அவர்களுடைய அபிலாசைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் தற்போதைய தேவையாக முக்கியத்துவம் அளித்து கருதப் படவேண்டியது கல்வி, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே ஆகும். இதுவே எம்மால் தற்காலத்தில் அடைய கூடிய சாத்தியமான இலக்காகும்.இதனடிப்படையில் நலிவடைந்து போகின்ற எமது சமுதாயத்தின் கல்வி, பொருளாதர, சமூக மேம்பாடு மற்றும் அபிவிருத்தியே எனது பிரதான நோக்காக அமையப்பெறும்.

எனவே தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் பாதையை கட்டமைத்து அரசியலில் புதிய திருப்பு முனையாக தான் அமைய எண்ணியுள்ளதோடு, இதனுடன் இணைந்து பற்றுறுதிமிக்க தமிழ்த்தேசிய பாதையில் தொடர்ந்தும் பயணித்து நிலைபேறான அபிவிருத்திக்கும் சாத்தியமான உரிமைக்குமான சமாந்தர அரசியல் நேர்கோட்டு பாதையில் தான் பயணிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக Dr இரா. சயனொளி பவன் கருத்து தெரிவித்தார்.

மாற்றத்தை எதிர்நோக்கும் அனைவரும் 
விடியலைத் தேடிய இளையவர் பயணத்துடன் இணைந்திருங்கள்.

Dr இரா. சயனொளிபவன்,
திகாமடுல்ல ( அம்பாறை ) மாவட்ட வேட்பாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு.