நாம் சர்வதேச ரீதியாக பலமாக இருக்கின்றோம்: இரா.சம்பந்தன்


இலங்கை தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சர்வதேசம் வலியுறுத்துகின்றது எனவே நாம் சர்வதேச ரீதியாக பலமாக இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற திருகோணமலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட இளையோருக்கான பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் எழுபதாயிரம் வாக்குகளை அளிப்பதன் மூலம் இரு ஆசனங்களை கைப்பற்றமுடியும் .

இலங்கை தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சர்வதேசம் வலியுறுத்துகின்றது எனவே நாம் சர்வதேச ரீதியாக பலமாக இருக்கின்றோம்.

பல்வேறுபட்ட மதத்தினரும் இனத்தினரும் வாழ்கின்ற பல சர்வதேச நாடுகளில் இருக்கின்ற அதிகாரப்பகிர்வுகள் வழங்கப்பட்டுள்ளதோ அவ்விதமான அதிகாரப்பகிர்வு ஏற்படக்கூடிய சூழல் இப்போது இலங்கையிலும் உருவாகியிருக்கிறது. அதனை நாம் இந்த தேர்தலைப் பயன்படுத்தி அதனை நிறைவேற்றவேண்டும்.

அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் முன்னெடுத்து வந்த செயற்பாடுகளில் முன்னேற்றம் இருக்கின்றது. நாங்கள் பலமாக நாடாளுமன்றம் செல்வோமானால் எம்மால் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் அவ்வாறாயின் திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை நாம் கைப்பற்றவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சி.தர்சன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.