பொருளாதார ரீதியில் நலிவடைந்து காணப்படுகின்ற திகாமடுல்ல மாவட்ட தமிழர்களுக்கு, தங்களுக்குரிய நிலையான வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கும்; வாழ்க்கை செலவுகளை தாங்கிக்கொள்வதற்கும் வேலை என்ற அடிப்படை தேவை மேலோங்கிக் காணப்படுவது யாரும் மறுக்க முடியாத உண்மையே !
இருப்பினும் அனைவருக்கும் வேலைவாய்ப்பை பெற்றுகொடுப்பது இதிலும் குறிப்பாக அரச தொழில் வாய்ப்பை பெற்றுகொடுப்பது என்பது சாத்தியமற்றதொன்று என்பதோடு இதனை சார்ந்து செயற்ப்படும் அரசியல் ஒரு ஏமாற்று அரசியலாகவே சித்தரிக்க முடியும் என திகாமடுல்ல மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் Dr இரா சயனொளிபவன் கருத்து தெரிவித்தார்.
இவர் மேலும் கூறுகையில் இளைஞர், யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி, பொய்ப்பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் தங்களை முதலில் சுய சிந்தனைக்கு உட்படுத்த வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் 53 தமிழ் கிராமங்கள் காணப்படுகின்றன. குறைந்தது ஒரு கிராமத்தில் 10 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றால் மொத்தமாக 530 இளைஞர்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் அரச வேலைவாய்ப்பினை பெற்றுத்தர முடியுமா? எவ்வாறு அது சாத்தியபாடானதொன்றாக அமையும்? இது நிச்சயமாக ஆழ்ந்து சிந்திக்கபட வேண்டிய விடயமே !
மேலும் இந்த அரசியல் வாதிகள் தாங்கள் அமைச்சராக பதிவி வகித்த காலப்பகுதியில் மாவட்டரீதியாக எத்தனை வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளனர் என்பதனையும் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் பெயர் ஊர் விபரங்களுடன் வெளியிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இவ்வாறு இவர்களால் வெளியிட முடியாது என்று தாம் உறுதியாக கூறுவதோடு மற்றும் இவ்வாறு இவர்கள் வேலைவாய்ப்பு விபரங்களை வெளியிடும் பட்சத்தில் இவர்களின் மாயையில் சிக்கியுள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு யதார்த்தம் விளங்கும் எனவும் தெளிவாக குறிப்பிட்டார்.
உண்மையிலே தற்போழுது இலங்கை கல்வி முறைமையை பொறுத்த வரையில் சிற்றூழியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வேலைவாய்ப்புகளும் போட்டிப்பரீட்சை அடிப்படையிலே இடம்பெறுகின்றன. போட்டிப்பரீட்சசையில் (நுண்ணறிவு, பொதுஅறிவு) நல்ல பெறுபேறுகள் பெறுகின்ற நபர்களே குறித்த வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்கின்றனர். இதனில் அரசியலின் தலையீடு வெறுமனே ஒப்பிட்டளவில் 0.1% காணப்படுகின்றது.
எனவே எனது கல்வி மேம்பாட்டு கொள்கையில் ஒரு பகுதியாக, இவ்வாறான போட்டிப்பரீட்சைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, அதனை ஊக்குவித்து அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருல் எனும் சாத்தியபாடான அணுகுமுறையை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் முன்வைக்கின்றேன் என்று DR இரா சயனொளிபவன் கருத்து தெரிவித்தார்.

போட்டி பரீட்சசைகளுக்கென தனிப்பட்ட நிதி வருடா வருடம் ஒதுக்கப்பட்டு இரண்டு நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறான பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்பு தமிழ் மாணவர்களை உள்ளீர்க்கபட்டு துறைசார் வல்லுநர்களை கொண்டு கற்கைநெறிகள், பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலமாகத்தான் எமது மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் வேலைவாய்ப்பு பெறும் விகிதத்தினை பாரிய அளவில் அதிகரிக்கமுடியும்.
ஒரு நிலையம் பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று பிரதேசங்களை மையமாக கொண்டும் மற்றைய நிலையம் கல்முனை,சம்மாந்துறை, காரைதீவு பிரதேசங்களை மையமாக கொண்டும் அமைக்கப்படும் என குறிப்பிடட அவர் இந்த இரு மையங்களின் ஊடாக எதிர்காலத்தில் போட்டி பரீட்சசைகளுக்கு தோற்றவுள்ள பெரும்பாலான எமது தமிழ் இளைஞர்கள் , யுவதிகளை தயார் படுத்துவதன் மூலம் கூடிய அளவு வேலைவாய்ப்பினை பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி கொடுக்கும் என்றும் . இது 100% சாத்தியமானதொன்றாகும் என்றும் குறிப்பிட்டார் .
இது என்னுடைய கல்வி மேம்பாட்டு கொள்கைகளில் வெறுமனே ஒரு பாகம். சிறந்த கல்வி சமுதாயத்தை கட்டி எழுப்ப சாத்தியமான பல கொள்கைகள் அடுத்த வரும் மக்கள் சந்திப்புகளில் குறிப்பிடுவேன் என்று குறிப்பிட்ட அவர் தனது அரசியல் வெற்றி பயணத்தில் கைகோர்த்து அணிதிரளுமாறு இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்தார் என்பதும் குறிப்பிடதக்கதொன்றாகும்.
















.jpg)