அம்பாறை தமிழர்களின் அரசியல் இருப்பு இழக்கப்படுமானால் அடுத்து நிகழப்போவது என்ன?


பல்வேறு கட்சிகளும், அதன் எண்ணிலடங்கா வேட்பாளர்களும் வாக்குகளை சிதைக்கும் தீய எண்ணத்துடன் பேரினவாத கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதால் தமிழ் மக்களின் இருப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் மக்களின் இருப்பு பறிபோகும் பட்சத்தில், அம்பாறை தமிழர்கள் இழக்கப்போவது எண்ணிலடங்காது என்று திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சயனொளிப்பவன் கருத்து தெரிவித்துள்ளார்.


01. அம்பாறை தமிழர்கள் ஏற்கனவே மறைந்து வாழும் சமுதாயம் போல் இருப்பதால், அரசியல் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டால் எமது அம்பாறை தமிழர் என்ற பிரத்தியேக அடையாளம் மழுங்க ஆரம்பிக்கும்.

02. அரசாங்கத்தில் உள்ள அல்லது இணைந்துள்ள பங்காளி கட்சிகள் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது.

உதாரணமாக:

1. தற்பொழுது எழுந்துள்ள காணி மற்றும் எல்லை பிரச்சினைகளும் அதன் ஆக்கிரமிப்புக்களும்.

2. தொல்பொருள் அகழாய்வு என்ற ரீதியில் தமிழர்களின் பாரம்பரிய நிலம் கைப்படுத்தப்படுகின்றமை.

3. பல விகாரைகள் கட்டியெழுப்பப்படும்.

எனவே சட்ட ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய இரண்டு விடயங்களும் ஒரு அரச பங்காளி கட்சிகளால் எட்டப்பட முடியாததொன்று.

03. அரசியல் அனாதையாக்கி, சகோதர சமூகத்திடம் கையேந்தி நிற்கும் அவல நிலையிற்கு தள்ளப்படுவதோடு, அவர்களது அடக்கு முறையிற்கும் உட்படுவோம்.

04. பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்படுமானால், அதனூடாக வழங்கப்படும் அனைத்து ஒதுக்கீடுகளும் நிறுத்தப்படுவதோடு அனைத்தும் சகோதர இனத்தவரின் கைகளுக்கு செல்லும்.

05. அம்பாறை தமிழர்களுக்கென்று பிரச்சினைகள் எழும்போதெல்லாம் நமக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல், அரசியல் அனாதையாக்கப்படுவோம். இவ் நேரத்தில் அயல் மாவட்ட உறுப்பினர்களும் வாக்கை பிரிப்பதற்கு வருகை தந்த கும்பலும் எம்மை கவனிக்க போவதில்லை.

06. பிரதிநிதித்துவம் இழக்கப்படுமானால் இதனுடைய தொடர்ச்சியான தாக்கத்தால் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளில் எமது பிரதிநிதித்துவம் குறைவடையும்.

07. எமக்கான உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டு, அபிவிருத்திகள் இல்லாமலாக்கப்பட்டு இருப்பிழந்து அடிமைகள் ஆவோம்.

இவை அனைத்துக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள கட்சி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், தமிழருக்கென்று காணப்படும் பலம் வாய்ந்த கட்சியான தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே எமக்கான ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வோம்.

எனவே என்றும் உறுதியான தமிழ்த்தேசிய பாதையில் இணைந்த அபிவிருத்தி என்னும் புதிய கொள்கையில் பயணிக்கும் ''விடியலை தேடும் இளையவர் பயணத்துடன்'' கைகோர்த்து உரிமையுடன் இணைந்த அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என இரா.சயனொளிபவன் கருத்து தெரிவித்தார்.