செங்கலடியில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரனிற்கு கௌரவிப்பு

(செங்கலடி நிருபர்)
இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருனாகரன் அவர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு – செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

செங்கலடி பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட கோவிந்தம் கருணாகரம்- ஜனா இதன் போது கருத்து தெரிவிக்கையில்,

செங்கலடி மற்றும் அதையண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் பெருமாதரவை எனக்கு வழங்கியிருந்தனர். அவர்களுக்கு நான் முதலில் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் எனது பங்களிப்பை வழங்கவிருக்கிறேன்.

2020 பாராளுமன்றத் தேர்தல் வட கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு சரிவைக் கொடுத்துள்ளது. அதே வேளை வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்திய வேட்பாளர்களாக களமிறங்கிய 5பேர் அரச கட்சியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2பேர் யாழில் 2பேர் வன்னியில் ஒருவருமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தெற்கு சிங்கள மக்கள் பொதுஜனபெரமுன கட்சிக்கு ஒரு பேராதரவை வழங்கி 145 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுத்துள்ளனர்.

இந்த அரசு தற்போது கூறுகின்றது தமிழர்கள் தரப்பில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் பேசவேண்டிய தேவை இல்லை த.தே.கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். தமக்குச் சார்பானவர்களை தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இம்முறைத் தேர்தலில் அரச கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள தமிழர்கள் 5பேரும் 4கட்சிகளை சார்ந்தவர்கள்.

கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவு என்ன என்பதை இந்த 3இல்2 பெரும்பான்மை பெற்ற ராஜபக்ச சகோதரர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்த ராஜபக்ச சகோதரர்களின் தகப்பனார் பாராளுமன்றிலே ஒரு உறுப்பினராக இருந்த நேரம் தான் SWRD.பண்டாரனாயக்கா அவர்கள் பிரதமராக 1956இல் இருந்தார். அந்த ராஜபக்சவும் SWRD.பண்டாரனாயக்கவும் இணைந்துதான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாகியதாக்கூறுவார்கள்.

13வது திருத்தச்சட்டத்தை மாற்ற வேண்டும் அல்லது அதை இல்லாமல் ஆக்க வேண்டும் மற்றும் 19வது திருத்தச்சட்டத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று அரசாங்கத்தரப்பினர் தற்போது கூறிக்கொண்டிருக்கின்றனர்.

13வது திருத்தச்சட்டம் பல தியாகங்களிற்கு பின்பு பல பேச்சுவார்த்தைகளுக்குப்பின்பு இந்திய, இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அன்றைய இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களை வற்புறுத்தி கிட்டத்தட்ட அவரது கையை முறுக்கி கையொப்பமிட்ட அந் ஒப்பந்தத்தை நீங்கள் இல்லாமல் செய்யப்போகின்றீர்கள் என்றால் இந்த நாட்டை மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் போராட்டக்களத்திற்குள் தள்ளவிடப்போகின்றீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

இந்தியா அந்த ஒப்பந்தத்தை நீங்கள் இல்லாமல் செல்வதை பார்த்தக்கொண்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.

3இல்2 பெரும்பான்மையைக் கொண்டுள்ளதாகவும் இந்த ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் மார்புதட்டும் இந்த அரசுக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான நீதியான அரசியல் அபிலாசைகளை தீர்த்துவைக்கூடிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு கடமை உள்ளது. என தெரிவித்தார்.