(ரூத் ருத்ரா)
கூத்து என்பது ஆடல் பாடலின் ஊடாக ஒரு கருத்தை வெளிப்படுத்தும் கலையாகும். நாடாகத்திற்குரிய பழம் தமிழ் சொல் கூத்தாகும்.
கூத்தின் அரங்க அளிக்கை முறை அரங்க நுட்;பத்தின் ஊடாக பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்டு காணப்படும்.மட்டக்களப்பில் வசந்தன் கூத்து, பறைமேள கூத்து,வடமோடி, தென்மோடி,மகுடிக் கூத்து,என வகைப்படுத்தப்பட்டு கூத்து நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.
இக் கூத்து கலையானது தமிழர்களின் பண்பாட்டு கலைகளில் ஒன்றாக காணப்பட்டாலும் மாவட்டத்தில் பல இடங்களில் அருகி வரும் கலையாக காணப்படுகிறது. அந்த வகையில் அதற்கு புத்துயிர் ஊட்டும் முகமாக வாகரை பிரதேசம் மதுரங்குளத்தில் ஆதி குடி மக்களினால் 8 வருடங்களின் பின்பு வள்ளியம்மை நாடகம் எனும் நாட்டுக் கூத்தானது பிரதேச இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் நேற்று இரவு அரங்கேற்றப்பட்டது.
தொடர்ந்து 3 மாத கால பயிற்சி ஒத்திகையின் பின்னர் அரங்கேற்றப்பட்ட கூத்தினை கண்டு களிப்பதற்கு பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர்.
மதுரங்குள கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அண்ணாவியார் க.நற்குணசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வானவேடிக்கையுடன் மத்தளம் முளங்க வள்ளியமை நாடகம் அரங்கேற்றப்பட்டது.
ஆதி குடி மக்களுக்கு பெருமை சேர்க்க வள்ளியம்மாள் குழந்தையாக பிறந்து அக்குடியினரினால் வளர்க்கப்பட்டு முருகப்பெருமானை திருமணம் செய்யும் வரை இடம்பெறும் சம்பவங்களை மையமாக கொண்டு கருத்து வெளிப்பட வள்ளியமை நாடகம் எனும் நாட்டுக் கூத்து அரங்கேற்றப்பட்டது.
இந் நிகழ்வில் சிறுவர்களும் கலைஞர்களாக பங்குபற்றி தங்களது திறமையினை வெளிக்காட்டினார்கள். இவ்வாறான நிகழ்வுகள் தங்களது பிரதேசத்தில் இடம்பெறுவதனால் தங்களது குல தெய்வத்தின் அருள் ஆசி கிடைக்கப்பெறுவதாகவும்,நோய் துன்பங்களில் இருந்து பாதுகாக்கவும் மக்களை மகிழ்சி படுத்தவும் இக் கூத்துக்கள் கிராமப் புறங்களில் அரங்கேற்றப்படுவதாக அண்ணாவியார் கணபதி நற்குணசிங்கம் மேலும் கருத்து தெரிவித்தார்.