ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை இடம்பெறும் ; பிரதமர் சபையில் உறுதி!


பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அது தொடர்பில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், விமல் வீரவன்ச உள்ளிட்டோர் பதுளையைச் சேர்ந்த ராஜகுமாரி கொழும்பில் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் எத்தகைய பாரபட்சமும் இன்றி அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

சட்டத்திற்கு வெளியே எதுவும் இடம்பெறாது. அதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். அதுதொடர்பில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

இத்துடன் இந்த பிரச்சினை தொடர்பில் எனக்கு எழுத்து மூலம் வழங்குமாறு மனோகணேசனை கேட்டுக்கொள்கிறேன். அதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுகிறேன். நீதிமன்ற நடவடிக்கையுடன் தொடர்புபட்ட விடயம் சம்பந்தமாக  தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்போம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகவே நான் தொலைபேசி மூலம் அது தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.

  மனோ கணேசன் அது தொடர்பில் விடயங்களை சபையில் முன் வைத்துள்ளார். அந்த விடயங்களையும் நான் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு அறிவிப்பேன் என்றார்.