தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு!!

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தலைமையில் இன்று (15) இடம் பெற்றது.

இதன் போது சாதனை படைத்த மாணவிகளை மட்டு நகர் காந்தி பூங்கா முன்றலில் இருந்து பேண்ட் வாத்திய இசை முழங்க ஆசிரியர்களினால் மாணவிகளுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

தேசிய மட்ட ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தமிழ் தினம் மற்றும் ஆங்கில தின போட்டிகளில் பங்கு பற்றி சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை கௌரவிக்கும் வகையில் கல்லூரி ஆசிரியரும்,தமிழ் மொழித்தின இணைப்பாருமான சோமசுந்தரம் சிவநிதி  ஆசிரியரின் ஒருங்கிணைப்பில் இன்று நடாத்தப்பட்ட நிகழ்வில் பரத நடனத்தில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவி விக்னேஷ்வரன் இஷானிகா மற்றும் ஆங்கில டிக் டேசன் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவி சசிகுமார் ஹர்ஷிகா ஆகிய மாணவிகள் இருவரும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆசிரியர் ஆலோசகர்களான நடன ஆசிரியர் சிவஞான ஜோதி குரு, ஆங்கில ஆசிரியர் மகேஸ்வரன் விக்னேஸ்வரி மற்றும் கல்லூரி பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.