மட்டுநகர் கேம்பிரிட்ஜ் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு வைபவமும்

(சித்தா)
மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு வைபவமும் முன்பள்ளியின் இயக்குநர் திரு.எம்.சாமுவல் ஜெயா  தலைமையில் மட்டக்களப்பு கல்லடி ட்ரீரூ மண்டபத்தில் 2024.02.24 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. 

இவ்விழாவில் பிரதம அதிதியாக முதன்மை உளவளத்துணையாளரும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான முதன்மைப் பயிற்றுநருமான திரு.முத்துராஜா புவிராஜா,  விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.எம்.வரதராஜன் , குழந்தை நல மருத்துவர் ஏ.சி.லக்ஸ்சாந்த் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா, பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திரு.சாம்பசிவம் பரணீதரன், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி ரீ.கே.எம்.அன்ரனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். இதன்போது பெற்றோர்களும், நலன்விரும்பிகளும் இங்கு சமூகமளித்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு மலர்கொத்துக்களும் வழங்கி பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். இறைவணக்கம், மங்கல விளக்கேற்றல் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந்நிகழ்வில் பிள்ளைகள் ஆடல், பாடல், பேச்சு போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.

தரம் 1 க்குச் செல்லும் பிள்ளைகளுக்கு அதிதிகளினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மிகச் சிறப்பான முறையில் இந்நிகழ்வை பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன்  ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளியின் இயக்குநர் ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.