பெரிய நீலாவணையில் பாடசாலை வேன் மோதி 4 வயது சிறுவன் பலி!


பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு வித்தியாலய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் மோதியே இந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை திங்கட்கிழமை (4) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வீட்டின் கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடியுள்ளான்.

அவ்வேளை அவ்வழியால் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மோதியதில் படுகாயமடைந்த சிறுவனை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவன் பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியை சேர்ந்தவன் என்பதுடன் விபத்தின்போது சிறுவனின் சகோதரியை ஏற்ற வந்த வேனே சிறுவனை மோதியுள்ளதாக கூறப்படுகிறது.