மூன்றாம் பாலினம் !



பிறப்பில் இருந்து அடிப்படையிலேயே தம்மைத் திருநங்கைகளாக உணரும் ஆண்கள், அவர்களது பிறப்பிற்குரிய பாலினத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக உளவள ஆலோசனைமூலம் ஆற்றுப்படுத்தல் எனும் மிகச் சிறந்த நடவடிக்கை மூலமாகவோ

அல்லது அவர்களின் பாலியல் நோக்குநிலையை அதாவது விருப்பு நிலையை மேம்படுத்துவதன் மூலமாகவோ நிச்சயமாகச் சுயநிர்ணய அதிகாரம் பெற வேண்டும்.

பிறப்பிலிருந்தான திருநங்கைகளையே உளவள ஆலோசனை மூலம் தங்களது அடிப்படைப் பாலினத்தை ஏற்கச் செய்ய முடியும் எனும்போது பருவ வயதை அடையும்போதோ அல்லது அடைந்த பின்னரோ ஏற்படும் சில சவால்களைத் தொடர்ந்து தம்மைத் திருநங்கைகளாகவோ திருநம்பிகளாகவோ உணரத் தொடங்கும் இரண்டாம் நிலைத் திருநங்கைகளையும் திருநம்பிகளையும் தமது பிறப்பிற்கான பாலினத்தைத் தொடர்ந்தும் விரும்பி ஏற்றுக்கொள்ளச் செய்தல் சவால் நிறைந்தது அல்ல.

எனவே பிறப்பில் இருந்தே தம்மைத் திருநங்கைகளாக உணர்பவர்கள், இரண்டாம் நிலைத் திருநங்கைகளை விட அதிகமாகத் தமது பால்நிலை சம்பந்தமான சுயநிர்ணய அதிகாரம் பெறவேண்டியவர்களாகும்.

துரதிஷ்ட வசமாக இரண்டாம் நிலைத் திருநம்பிகள் ஆரம்பநிலைத் திருநங்கைகளை விட அதிகரித்துள்ளமையும் அவர்கள் தங்களது சுயநிர்ணய அதிகாரத்தைப் பெற்றுள்ளனர் என்பதும் இன்றைய யதார்த்தமாகும். மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் தொடர்ந்தும் டிரான்ஸ் குழுக்களால் இவர்கள் ஈர்க்கப்படுவதும் கண்கூடு.

உலகளாவிய தரவுகளின்படி ஆண் திருநங்கைகள், பெண் திருநம்பிகளின் எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாகும். இது கிட்டத்தட்ட 10 : 1 என்ற விகிதமாகும்

ஆனால் இலங்கையில் இந்த விகிதம் அதற்கு நேர்மாறாக இருப்பது உண்மையில் கவலைக்குரிய விஷயம். இதற்கான காரணங்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் அக்கறையோடு ஆராயப்பட, கவனிக்கப்பட வேண்டியவையாகும்

இது மிகவும் குறிப்பிடத்தக்க குடும்ப சமூக-கலாச்சார எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளமை வருத்தத்தோடும் அக்கறையோடும் நோக்கற்பாலது.

எனவே, அடிப்படையிலேயே மூன்றாம் பாலினத்தவர்களை சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இணையான கௌரவத்தோடு அரவணைப்போம்.

இரண்டாம் நிலை மூன்றாம் பாலினரை விளம்பரங்கள் ஊடகங்களின் மாயவலையிற் சிக்காத வண்ணம் ஆரோக்கியமாகவும் அக்கறையோடும் மீட்டெடுத்துக் கலாச்சாரச் சீரழிவுகளில் இருந்து பாதுகாப்போம்.




சமூக அக்கறையுடன்

Dr. செல்லையா வாமதேவன்

உளநல மருத்துவர்

போதனா வைத்தியசாலை

மட்டக்களப்பு