குளியாப்பிட்டிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மற்றுமொரு சடலம் மீட்பு !


குளியாப்பிட்டிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அதே இடத்தில் எலும்புக் கூடுகளுடன் கூடிய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாதம்பே பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பனிரெண்டாவ வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது .

தகவலின் அடிப்படையில் சிலாபம் குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவ இடமான வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர் .

குளியாப்பிட்டிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்குச் சற்று தொலைவில் மரமொன்றிற்கு அருகில் எலும்புகளுடன் கூடிய சடலமொன்று கிடந்துள்ளது .

இது தொடர்பில் நீதிவானுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, நீதிவானும் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அவதானித்த பின்னர் சடலம் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் சடலத்தை அடையாளம் காண இதுவரை யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எலும்புகளுடன் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

மேலும் சில மாதங்களுக்கு முன்னர் யாரேனும் ஒருவர் காணாமல் போயிருந்தால் உடனடியாக சிலாபம் பொலிஸாரிடமோ அல்லது சட்ட வைத்தியர் அலுவலகத்திலோ இது குறித்து விசாரிக்க முடியும் எனப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .