இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல் !


அகமதாபாத்: இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் சென்ற 4 ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நாசவேலைகளில் ஈடுபட அவர்கள்திட்டமிட்டிருந்தது விசாரணை யில் தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணையில், இலங்கையை சேர்ந்த நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேர், கொழும்பில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத்துக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இலங்கை புலனாய்வு துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், “4 பேரும் என்டிஜே என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். தற்போது 4 பேரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றனர்’ என்று தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் சாதாரண உடையில் மறைந்திருந்தனர். அன்றிரவு நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேர் இண்டிகோ விமானத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்

இதுகுறித்து குஜராத் டிஜிபி விகாஸ் சஹாய், குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு உயரதிகாரிகள் ஹரிஷ் உபாத்யாயா, சுனில் ஜோஷி ஆகியோர் கூறியதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் அபு பக்கர் உத்தரவின்பேரில் 4 பேரும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மட்டுமே பேசுகின்றனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 21, 22-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த சூழலில், நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் திட்டம் தீட்டிஇருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் நுபுர் சர்மா, ராஜா சிங், உப்தேஷ் ரானாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில் இதுதொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒரு தீவிரவாதியின் செல்போனில் அகமதாபாத்தின் நர்மதா நதி கால்வாயின் புகைப்படம் இருந்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸார் ஆய்வு செய்து, 20 தோட்டாக்களுடன் கூடிய, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள், ஐ.எஸ். தீவிரவாத இயக்க கொடி ஆகியவற்றை கைப்பற்றினர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை: பொதுவாக தீவிரவாத செயல்கள், அதிதீவிர குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மாநில போலீஸார் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். அதிலும், தமிழக காவல் துறையின் ‘க்யூ’ பிரிவு போலீஸார் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். குறிப்பாக, இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் யார்? அவர்களது பின்னணி என்ன என்பது கவனிக்கப்படும்.

ஆனால், தற்போது சென்னையில் இருந்து நழுவிச் சென்று குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 தீவிரவாதிகளும் சென்னையில் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து வகையாக உளவு பிரிவு போலீஸாரின் பார்வையில் இருந்தும் தப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். க்யூ பிரிவு போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவிட கூடாது என்பதற்காகவே விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது